Powered By Blogger

  

"தெய்வப் புலவர்" திருவள்ளுவர் 
இயற்றிய 

"உலகப் பொதுமறை" திருக்குறள்

⭘.◠.◡.◠.◡.◠.◡.◠.◡.◠.◡.◠.⭘

முகப்புரை

திருக்குறள், சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்கள் திரட்டிற்குட்பட்டதாகும்.

இது ஈரடிகளில் எழுசீர் கொண்ட குறள் வெண்பா வகையினாலான குறட்பாக்களைக் கொண்டது.

திருக்குறள் 133 அதிகாரங்களாகவும், ஒவ்வொரு அதிகாரமும் 10 செய்யுட்பாக்கள் வீதம், ஆக 1,330 செய்யுள்களைக் கொண்டது.திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்று பால் பகுப்புகளாக அமையப்பெற்றது.

திருக்குறள் உலகெங்கிலும் கடைப்பிடிக்க வேண்டிய மானுடவியலின் அறநெறிகளை நீக்கமற வலியுறுத்தியும் வாழ்க்கை வழிகாட்டுதல்களையும் பகுத்துச் சொல்லப்பட்ட மிகவும் தொன்மையான படைப்பாகும். திருக்குறள் பொதுத் தன்மையோடு மதச்சார்பற்ற வகையிலான படைப்பாகக் கருதப்படுகிறது.

ஓலைச் சுவடியில் எழுதப்பட்டிருந்த திருக்குறள் அச்சில் கொணரப்பட்ட ஆண்டு 1812.

திருக்குறளுக்கு முதன் முறை உரை எழுதியவர் மணக்குடவர். திருக்குறளில் குறிப்பறிதல் எனும் தலைப்புடைய இரண்டு அதிகாரங்கள் உள்ளன. அவையாவன;

பொருட்பாலில் அதிகாரம் 71 மற்றும் இன்பத்துப்பாலில் அதிகாரம் 110.

திருக்குறளை முதல் முறையாக பிற மொழியில் மொழி பெயர்த்தவர், வீரமா முனிவர்.திருக்குறளை முதல் முறையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர், G.U.போப் ஆவார்.



முப்பால்களும் குறள்களும்1. அறத்துப்பால் (38 அதிகாரங்கள்)

1. பாயிரம் 1-4
2. இல்லறவியல் 5-24
3. துறவறவியல் 25-37
4. ஊழியல்

382. பொருட்பால் (70 அதிகாரங்கள்)

1. அரசியல் 39-63

2. அமைச்சியல் 64-73

3. அரணியல் 74-75
4. கூழியல் 76
5. படையியல் 77-78
6. நட்பியல் 79-95
7. குடியியல் 96-108

3. இன்பத்துப்பால் (25அதிகாரங்கள்)

1. களவியல் 109-120
2. கற்பியல் 121-133

எல்லாத் தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறப்பு மிக்க குணநலன்களால் தான் திருக்குறள் உலகில் பொது மொழியான ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளது.

இன்று வரையிலும் உலகெங்கிலும் தமிழ் மொழியில் புகழ் பெற்ற ஒரே நூலாகத் திகழ்ந்து வருகின்றது என்றால் அது மிகையில்லை.

நன்றி நவிலல்



1. கடவுள் வாழ்த்து

(கடவுளை வணங்குதல்)
(நாடு என்பதன் இன்றியமையா அங்கங்கள்)
பொருட்பால் | பாயிரம் குறள்# 1-10
1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்கள் யாவும் அகர எழுத்தை முதலாகக் கொண்டவை; உலகின் உயிர்கள் யாவும் இறைவனை முதன்மையாகக் கொண்டவையாகும்.

2
கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தூய அறிவின் உருவெனத் திகழும் இறைவனின் திருவடிகளை வணங்காதவர்க்கு, அவர் கற்ற கல்வியினால் என்ன பயன்?

3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலர் போன்ற மனத்துள் நிறைந்திருக்கும் இறைவனின்  பெருமைமிகும் திருவடிகளை நினைந்து வாழ்பவர், உலகில் நெடுங்காலம் சிறந்து வாழ்வர். 

4
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு வெறுப்பற்ற இறைவனின் திருவடிகளை நாடுவோர்க்கு, ஒரு போதும் துன்பம் வருவதில்லை.

5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவனது மெய்ப்புகழை விரும்பும் ஒருவரிடம் அவர்தம் அறியாமையின் காரணமாக வரும் நல்வினை தீவினை ஆகிய இருவினைகளும் சேருவதில்லை.

6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலங்களின் ஆசைகளை ஒழித்த இறைவனின் பொய்யற்ற ஒழுக்க நெறியைப் பின்பற்றுவோர், நிலைத்த நல்வாழ்வைப் பெறுவர்.

7
தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்கு ஈடு இணையில்லாத இறைவனின் திருவடிகளைப் போற்றிப் பணிவோர்க்கு அன்றி மற்றவர்களின் மனக்கவலையைப் போக்குதல் அரிதாகும்.

8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

கடல் போல் அறம் பொருந்திய இறைவனின் திருவடிகளைப் பணிந்தவர் அன்றி மற்றவர்கள், துன்பம் எனும் கடலை நீந்திக் கடத்தல் அரிதாகும்.

9
கோளில் பொறியில் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

எட்டு வகைக் குணங்கள் கொண்ட இறைவனின் திருவடிகளை வணங்காதவருடைய தலை என்பது, கேட்பதற்கு இயலா செவிகள், பார்ப்பதற்கு இயலா கண்களைப் போன்று பயனற்றதாகும்.

10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.


இறைவனுடைய திருவடிகளை வணங்கிச் சேருபவர், பிறவி எனும் பெருங்கடலை நீந்திக் கடந்து விடுவர்; மற்றவர் அங்ஙனம்  கடக்க மாட்டார்.



2. வான் சிறப்பு

(மழையின் சிறப்பு)

 அறத்துப்பால் | பாயிரம் | அதிகாரம் 2 | குறள்கள்#11-20

11

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிர்தம் என்றுஉணரற்ப் பாற்று.


வானம் தவறாது மழை பெய்வதால், உலகிலுள்ள உயிர்கள் யாவும் வாழ்கின்றன; அதனால் தான், அந்த மழையானது அமிழ்தம் என அழைக்கப்படுகின்றது.


12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.


உண்பவர்களுக்கு நல்ல உணவுகளை விளைவித்துத் தருவதும், அவர்களுக்கே அருந்தும் உணவாகவும் அமைந்து நன்மை தரும் சிறப்புடையதும் மழை ஆகும்.


13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி.


உரிய காலத்தில் மழைப் பொழியாமல் பொய்த்துப் போனால், கடல் நீரால் சூழப்பெற்ற, இப்பெரும் உலகில் வாழும் உயிர்களை, பசி எனும் துயர் வந்து, வாட்டி வதைத்து விடும்.

14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால்.

மழை எனும் செல்வ வளம் குறைந்து விட்டால், உழவர்கள் ஏர் கொண்டு உழவு செய்ய இயலாமல் போய் விடும்.

15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.


பெய்யாதிருந்து மக்களை கெடுப்பதுவும் மழை, நலிந்தவர்க்குத் துணையாக அவர்தம் வாழ்வில் வளம் சேர்ப்பதுவும் மழையே.

16
விசும்பின் துளி வீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைக்காண்பு அரிது.


வானில் இருந்து மழைத் துளி விழாது போயின், பசும்புல்லின் தலையாகிய அதன் நுனியைக் கூட காண்பது என்பது அரிதாகி விடும்.

17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்.


மேகம் கடலின் நீரை எடுத்து, மீண்டும் மழையாகப் பொழியாமல் போனால், அந்தப் பெரும் கடலின் வளம் கூட குறைந்து விடும்.

18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
.

உரிய காலத்தே மழை பெய்யாது போனால், வானவராகிய உயர்ந்தோர்க்காக செய்விக்கப்படும் விழாக்கள், வழிபாடுகள் எதுவும் நடைபெறாது.

19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.


வானம் மழை பொழியாது போனால், இப்பெரும் உலகில், தானம், தவம் ஆகிய இரண்டும் இல்லாது போய் விடும்.

20
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.


நீர் இல்லாது போனால், இந்த உலகம் இல்லாது போகும் என்பது போல, மழை பெய்யாது போனால், மனிதர்தம் ஒழுக்கநெறியும் இல்லாது போய்விடும்.


 

3. நீத்தார் பெருமை

(துறவு கொண்டோரின் சிறப்பு)

அதிகாரம்.3 | அறத்துப்பால் | பாயிரம் | குறள்கள்#21-30


21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

நல்லொழுக்க நெறிகளைப் பின்பற்றி ஆசைகளைத் துறந்தவர்களின் பெருமையை சிறந்தது எனப் போற்றிக் கூறுதல் நூல்களின் துணிவாகும். 


22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து 

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 


துறவிகளின் பெருமையை அளவிட்டு எடுத்துக் கூறல், இவ்வுலகில் இறந்தோரை எண்ணிக் கணக்கிடுதல் போன்றது.


23

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.


நன்மை தீமைகளை ஆராய்ந்து அறிந்த பின், இப்பிறப்பில் துறவு மேற்கொள்வோரின் பெருமையே உலகில் உயர்ந்ததாகப் போற்றப்படும்.


24

உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து.


தன் அறிவின் பலத்தால், யானைகளைப் போன்ற ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவன், எல்லாவற்றிலும் மேலான வீடு எனும், பேரின்ப நிலத்திற்கு சிறந்த விதை போன்றவன் ஆவான்.

25

ஐந்து அவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்

இந்திரனே சாலும் கரி.


ஐம்புலன்களின் ஆசைகளை அடக்கியவனின் ஆற்றலுக்கு வானுலகத் தலைவனாகிய இந்திரனே தக்க சாட்சியாவான்.


26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.


செய்வதற்கு அரிதான செயல்களை செய்பவரே பெரியோர்; அவ்வாறு செய்ய இயலாதவர் சிறியோர் ஆவார்.


27

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின் 

வகைதெரிவான் கட்டே உலகு.


சுவை, பார்வை, உணர்ச்சி, ஓசை, மணம் ஆகிய ஐந்தின் வகையான ஐம்புலன்களையும் அறிந்து, அடக்கியாளும் வல்லவனிடத்தில் இவ்வுலகம் வசப்பட்டதாம்.


28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து 

மறைமொழி காட்டி விடும்.


பயன்மிக்கதான நிறைச் சொற்களை கூறும் துறவிகளின் பெருமையை அவர்களின் அச்சொற்களே உலகுக்குக் காட்டிவிடும்.


29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 

கணமேயும் காத்தல் அரிது.


நற்குணம் என்னும் மலை மேல் உயர்ந்து நிற்கும் துறவிகளுக்கு கணநேர கோபம் கொள்வது என்பதும் அரிதாகும்.


30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.


எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அன்பு செலுத்தும் அறம் கொண்டு வாழ்வோரே அந்தணர் ஆவார்.


முற்றும்


அடுத்த அதிகாரம் - 4 அறன் வலியுறுத்தல்

4. அறன் வலியுறுத்தல்

(அறத்தின் சிறப்பை வலியுறுத்துதல்)

#31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு?

அறம் என்பது, மக்களுக்கு சிறப்பையும் செல்வத்தையும் தரக்கூடியது; ஆதலால், அவ்வறத்தை விடவும், நன்மை பயப்பது வேறு யாது? 

32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.

அறம் செய்வதைக் காட்டிலும், சிறந்த நன்மையைத் தருவது, ஏதும் இல்லை; அத்தகைய அறத்தினை செய்யாமலிருத்தலை விடவும், வேறு பெரிய கேடும், எதுவுமில்லை. 

33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
சொல்லும்வாய் எல்லாம் செயல்.

இயன்ற வரையில், தக்க இடங்களில் எல்லாம், அறம் சார்ந்த செயல்களை, இடைவிடாமல் செய்தல் வேண்டும்.

34
மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

ஒருவன் தம் மனதால், குற்றம் அற்றவனாக இருத்தல் வேண்டும்; அதுவே, அறம் ஆகும். அதுவல்லாது மற்ற யாவும் வீண் ஆரவாரமே.

35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கும், அறத்திற்குப் புறம்பானவையாகும்; எனவே, அவற்றை விலக்குதலே, அறமாகும். 

36
அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றும் கால் பொன்றாத் துணை.

பின்னாளில் பார்த்துக் கொள்வோம் என்றில்லாமல், இப்போதே அறம் செய்தல் வேண்டும்; அங்ஙனம் செய்யும் அறமே பின்னாளில் தம் இறுதிக் காலத்தே துணை நிற்கும். 

37
அறத்தாறு இதுஎன வேண்டா; சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

அறத்தினால் விளையும் பயன் இதுவென்று யார்க்கும் சொல்ல வேண்டியதில்லை; பல்லக்கை சுமப்பவரையும், அதன் மேல் அமர்ந்து செல்பவரையும் பார்க்குங்கால் உணரப்படும். 

38
வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.

ஒருவன், நாள் தவறாது செய்யும் அறம், அவன் மீண்டும் பிறத்தலுக்கான பிறவி வழியை அடைக்கும் கல்லாக அமையும். 

39
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த; புகழும் இல.

அறம் சார்ந்த வாழ்வின் வழியே வருவதே புகழுடன் கூடிய இன்பமாகும்; அறமின்றி வருவன எல்லாம் துன்பமானதும், புகழ் அற்றதுமாகும். 

40
செயற்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி.

ஒருவன், வாழ்நாளில் செய்யத் தக்கது அறமே;  செய்யாது தவிர்க்க வேண்டியது, தன்பால் பழி சேர்க்கும் தீய செயல்களே.

5.இல்வாழ்க்கை

41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

இல்லறம் கொண்டு வாழ்பவன் யாரெனின், பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூன்று உறவுகளுக்கும் உற்ற துணையாய் இருந்து வழிநடத்துபவனே ஆவான். 

42
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

துறவிகளுக்கும், வறுமையால் வாடுவோர்க்கும், ஆதரவில்லாததால் இறந்தவரைப் போல் துயரம்  கொண்டோர்க்கும் இல்லற வாழ்வில் இருப்பவரே துணையாவார். 

43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

முன்னோர்கள், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐவரிடத்தும் தவறாமல் அறச்செயல்கள் புரிதல் சிறந்த கடமையாகும்.

44
பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பழிக்கு அஞ்சி நல்வழியில் பொருள் ஈட்டுதலையும், அதை  பிறருடன் பகுத்து உண்ணுதலையும், இல்லறத்தில் கடைப்பிடிப்பவரின் வாழ்வில் எப்போதும் குறையேதும் வருவதில்லை.

45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இல்வாழ்க்கையில், கணவன்-மனைவி, பிள்ளை ஆகியோரிடையே அன்பும், நட்பு-சுற்றத்தாரிடத்தே, அறம் மிக்கதுமான குணமுமே அவ்வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.

46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?

ஒருவன் அறநெறி தவறாது, இல்வாழ்க்கையை நடத்துவான் எனில், அதை விடுத்து அறம் மீறிய வழியில் செல்வதால், பெறப்போகும் பயன் தான் என்னவோ?

47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

இல்லறத்தை நல்லறத்தோடு வாழ்பவர், இவ்வுலகில், எத்தகு திறத்தாரினும் முதன்மையானவர் ஆவார்.

48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா; இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

பிறரையும் அறநெறி தவறாது வழிநடத்தி, தானும் அறம் தவறாத வழி நிற்பவரின் இல்லற வாழ்வு, துறவு வாழ்வை விடவும் வல்லமை மிக்கது ஆகும். 

49
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.

அறம் என்று போற்றப்படுவதே இல்வாழ்க்கை.  அதுவும், பிறரால் பழிக்கப்படாத தன்மையதாயின் மேலும் சிறப்பானதாகும்.

50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

இவ்வுலகில், வாழ வேண்டிய அறநெறிகளின்படி  வாழ்கின்றவர், மேலுலகத் தெய்வத்தினராக மதிக்கப்படுவர்.

6.வாழ்க்கைத் துணை நலம்

(வாழ்க்கைத் துணைவியின் சிறப்பு)

51
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

இல்லறத்திற்கான நற்பண்புகளோடு, தன் கணவனின், பொருள் வளத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு இல்லத்தை வழி நடத்துகிறவளே சிறந்த வாழ்க்கைத் துணையாவாள்.

52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.

மனைவியிடம் இல்லறத்திற்கான நற்பண்புகள் இல்லாவிடில், அவ்வாழ்க்கை, எத்தகைய சிறப்புடையதாகினும் அதனால் ஒரு பயனுமில்லை.

53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
?

நற்பண்புகள் உடைய மனைவியால் வாழ்க்கையில் ஒருவனுக்கு இல்லாதவை என்ன? அவ்வாறு, நற்பண்புகள் இல்லாத மனைவியால் அவ்வாழ்க்கையில் இருப்பவை தான் என்னவோ?

54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெரின்?

பெண் என்பவள் கற்புநெறி எனும் திடமான உறுதிப் பண்பைக் கொண்டவளாக இருந்தால், அதைவிட மேலான பெருமை வேறு என்ன உள்ளது?

55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

கடவுளைக் கூடத் தொழாமல், தன் கணவனையே கடவுளென நினைந்து துயில் எழும் பெண்ணானவள், 'பெய்' என்று சொன்னால், மழையும்  பெய்யும். 

56
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

கற்பு நெறி பிறழாது, தன்னைக் காத்துக் கொண்டு, தன் கணவனையும் பாதுகாத்து, தன் இல்லத்தின் புகழையும் காப்பதில், உறுதி குலையாமல் வாழ்பவளே பெண்.

57
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

பெண்களை சிறை போன்று அடிமை செய்து காத்தல் என்பது பயனற்றது; அவர்கள், தம் கற்பு நெறியாலும், சிறந்த பண்பினாலும், தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் காவலே தலை சிறந்தது.

58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

கணவனைப் போற்றி தம் கடமையைச் செய்யும் பெண்ணானவள், தான் வாழும் புத்துலகில் பெருஞ்சிறப்பை அடைவர். 

59
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

இல்லத்தின் புகழைக் காக்க வல்ல, மனைவியை அடையப்பெறாதவர்க்கு, தம்மை இகழும் பகைவர் முன்பாக, காளை போல், பெருமிதமாய் நடை போடும் பெருமை, வாய்ப்பதில்லை.

60
மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.

சிறந்த பண்புகளை உடைய, மனைவியே இல்லத்தின் மங்கலம் ஆகும்; அதனினும், நல்ல மக்களைப் பெறுதல் அச்சிறப்பினும் அழகு சேர்க்கும்.  

7.மக்கட் பேறு

(சிறந்த பிள்ளைகளைப் பெறுவதன் சிறப்பு)

அதிகாரம் 1. மக்கள்பேறு | அறம் | இல்லறம் | குறள்கள் 61-70

61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

அறிவு மிக்க பிள்ளைகளைப் பெறுதலை விடவும், ஒருவருக்கு இல்வாழ்க்கையில், சிறந்த பேறு வேறு எதுவும் இல்லை.

62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

பிறரது பழித்தலுக்கு இடமின்றி, நற்பண்புகளோடு பிள்ளைகளைப் பெறுபவர்க்கு, அவர்தம் எழுபிறப்பிலும் துன்பம் வருவதில்லை.

63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

ஒருவர்க்கு தாம் பெற்ற பிள்ளைகளே செல்வம் ஆகும்; அப்பிள்ளைகள் செல்வமாவது, அவரவர் நற்செயல்களால் வாய்க்கப் பெறுவதாகும்.

64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

தம் மழலையின் துளிர்க் கரங்களால் அளாவப் பெற்ற கூழ் உணவானது, அப் பெற்றோருக்கு அமிழ்தை விடவும், இனியதாகும்.

65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

தம் குழந்தைகளை அன்பால் தழுவுதல் உடலுக்கு இன்பம்‌; அவர்கள் பேசும் இன்சொற்களோ செவிக்கு இன்பம் தருவதாம்.

66
குழலினிது யாழ்இனிது என்பதன் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

தம் குழந்தைகளின் இனிமை கொஞ்சும் மழலைச் சொற்களைக் கேளாதவர்களே குழலிசையும், யாழ் இசையும் இனியவை என்று கூறுவர்.

67
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

தந்தையானவர், தன் மகனுக்கு செய்ய வேண்டிய நன்மை,  அவனை அறிவார்ந்தவர் அவையில் சிறந்தவனாய் விளங்கும்  கல்வி அறிவுடையவனாக்குதலே  ஆகும்.

68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

பெற்றோரை விடவும், பிள்ளைகள் அறிவாற்றலில் சிறந்து விளங்குதல், அவர்தம் பெற்றோருக்கு மட்டுமன்றி, உலகினர் எல்லோருக்குமே அக மகிழ்ச்சி தருவதாகும்.

69
ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

தன் மகன் கல்வி, அறிவு, நல்லொழுக்கம் யாவற்றிலும் சான்றோன் என, பிறர் புகழக் கேட்கும் தாய்க்கு, அவனைப் பெற்றெடுத்த பொழுதினும் பெருமகிழ்ச்சி தருவதாகும்.

70
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

மகன் தனது தந்தைக்கு செய்யும் உதவி என்பது "இவன் தந்தை, இவனை மகனாய் பெற, என்ன தவம் செய்தாரோ!" எனப் புகழ்ந்து சொல்லும்படியாக, சான்றோனாய் வாழ்வதே ஆகும்.

அடுத்த அதிகாரம்: 8.அன்புடைமை

8.அன்புடைமை

(பிறரிடத்தே அன்புடையவராய் இருத்தல்)

அதிகாரம் 8. அன்புடைமை | அறம் | இல்லறம் | குறள்கள் 71-80

71
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.

உள்ளம் நிறைந்த அன்பை தாழிட்டு அடைத்து வைத்திடல் கூடுமோ? தம் அன்புக்குரியவரின் துன்பத்தைக் கண்டு, வழியும் கண்ணீர் துளியே, அவர்தம் அன்பை வெளிக்காட்டி விடும்.

72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பு இல்லாதவர்கள், எல்லாவற்றையும் தமக்கே உரியதாய் ஆக்கிக் கொள்வர்; அன்புடையவர்களோ, தம் உடலாலும்  பிறர்க்கென உடையதாக்கி வாழ்வர்.

73
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

அரிதான உயிரும், உடலும் இணைந்தது போன்றதே அன்போடு இசைந்தது வாழ்க்கை.

74
அன்புஈனும் ஆர்வம் உடைமை; அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.

அன்பு மிகுத்தவரிடத்தே, பழகும் ஆர்வத்தை உண்டாக்கும்; அது அனைவரிடத்தும், நட்பு பாராட்டும் அளப்பரிய சிறப்பையும் தரும்.

75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

இவ்வுலகில், இன்பமாக வாழ்வோரின் சிறப்பின் காரணம், அவர் பிறரிடத்தே அன்பு செய்து வாழும் வாழ்க்கையின் பயனே ஆகும்.

76
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.

அறியாதவர்களே, அன்பு என்பது அறம் செய்வதற்கு மட்டுமேயானது என்பவர்; மாறாக, வீரத்திற்கும் அன்பே துணையாகும்.

77
என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம்.

எலும்பற்ற புழு போன்ற உடலை வருத்தும் வெயில் போல, அன்பு இல்லாதவர் உயிரை அறம், வருத்தி விடும்.

78
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.

உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழும் வாழ்க்கையானது, பாலை நிலத்தில், காய்ந்த மரமானது தளிர்த்ததற்கு ஒப்பானதாகும்.

79
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு?

ஒருவருக்கு அன்பு எனும் அக உறுப்பு இல்லாமல், அவர்தம் உடலின் புற உறுப்புகளால் மட்டும் என்ன பயன்?

80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பின் வழி இயங்குவதே உயிர் கொண்ட உடல் ஆகும்; அன்பிலாதவர்க்கு, எலும்பை தோல் கொண்டு போர்த்திய வெற்றுடலாகும்.

அடுத்த அதிகாரம்: 9. விருந்தோம்பல்

9.விருந்தோம்பல்

(விருந்தினரைப் போற்றுதல்)

81
இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

இல்லத்தைப் போற்றிப் பாதுகாத்து வாழ்வது, தம் விருந்தினரை உபசரித்து, அவர்களுக்கு உதவி செய்தற் பொருட்டே ஆகும்.

82
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

இல்லம் வந்த விருந்தினரைப் புறந்தள்ளி விட்டு, தான் மட்டும் உண்ணும் சாகா மருந்தான அமிழ்தேயாயினும், அது விரும்பத் தக்கதல்ல.

83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

நாளும், இல்லந்தேடி வரும் விருந்தினரைப் போற்றி உபசரித்து, மகிழ்வோரது வாழ்க்கை, ஒருபோதும் கெடுவதில்லை.

84
அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

இன்முகத்தோடு விருந்தினரைக் கொண்டாடுகிறவர் இல்லத்தில், செல்வமெனும் திருமகள் உளம் மகிழ்ந்து நிலைத்திருப்பாள்.

85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்?

விருந்தினருக்கு முதலில் விருந்தோம்பி, பின் மிஞ்சிய உணவை உண்பவரின் நிலத்தில், விதையும் விதைத்திடல் வேண்டுமோ?

86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

வந்த விருந்தினரை விருந்தோம்பி வழியனுப்பிவிட்டு, வரவிருக்கும் விருந்தினரை, ஆவலாய் எதிர்நோக்குபவர் வானுலகத்தவரின் சிறந்த விருந்தினர் ஆவான்.

87
இனைத்துணைத்து என்பதொன்று இல்லை; விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

விருந்தோம்புதல் எனும் வேள்வியால் விளையும் பயன்,  இதுவென்று அளவிடுதற்கில்லை; அது விருந்தினர் தகுதியின் அளவைப் பொருத்தது.

88
பரிந்தோம்பி பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

ஒருவர் தன் செல்வத்தை வேள்வியின் பயனைத் தரக்கூடிய விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் சேர்த்து வைத்து, பின்னர், அதை இழக்கும் நிலை வரும்போது, அதற்காக மிகவும் வருந்துவார்.

89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

செல்வமிருந்தும் வறுமை நிலைக்கு ஒப்பான விருந்தினரைப் போற்றா அறியாமைத் தன்மையானதுஅறிவற்றவர்களிடம் காணப்பெறும்.

90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

முகர்ந்த உடனே அனிச்ச மலர் வாடிவிடும்; நம் முகம் மாறுபட்டு விருந்தினரைப் பார்க்குங்கால், அவர் முகமும் வாடிப் போகும்.

10.இனியவை கூறல்

(இனிய சொற்களைக் கூறுதல்)

91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

அன்பு கலந்ததும், வஞ்சனை அற்றதும், வாய்மை நிறைந்ததுமான வாய்ச் சொற்களே இன்சொல் ஆகும்.

92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

அகமகிழ்ந்து பிறர்க்கு‌ பொருளை அளிப்பதை விடவும், முகம் மலர்ந்து இனிமையாக பேசுதல், சிறந்த பண்பாகும்.

93
முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

முகம் மலர்ந்து இனிதாய் நோக்கி, அகம் மலர்ந்து இனிய சொற்களைக் கூறுதலே, அறம் சார்ந்த இனியப் பண்பாகும்.

94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு.

அனைவருக்கும்  இன்பம் தரவல்ல, இனிய சொல் பேசி கனிவாய் நட்பு கொள்பவருக்கு வறுமை வருவதில்லை.

95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

ஒருவருக்கு பணிவு, இனிமையாய் பேசும் நற்குணம் ஆகியவையே சிறந்த அணிகலன் ஆகும்; வேறு எதுவுமே அணி அல்ல.

96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

பிறர் நன்மைகள் கருதி ஆராய்ந்து, இனிய  சொற்களைப் பேசுவோர் வாழ்வில் தீமைகள் விலகி நல்லறம் சிறக்கும்.

97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பிறர்க்கு நன்மை தரக்கூடியதும், இனிய பண்பினின்று விலகாததுமான இன்சொற்களைக் கூறுவோர்க்கு, நீதி விலகாத வாழ்க்கையையும், இன்பம் மிகுந்த நன்மைகளையும் தரும்.

98
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

பிறர்க்கு துன்பம் தரவல்ல, சிறுமையில்லாதவாறு கூறும் இன்சொல் ஒருவர்க்கு எப்பிறப்பிலும் இன்பம் தரும்.

99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?

தமக்கு இன்பத்தைத் தரக்கூடியது பிறரது இனிய சொற்களேயென உணர்ந்தவர், மாறாக, பிறர்க்குத் துன்பம் தரவல்ல கடுஞ்சொற்களை ஏன் சொல்ல வேண்டும்?

100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

இன்சொற்களைக் கூறாமல், கடுஞ்சொற்களை கூறுதல் என்பது, தன்னிடம் உள்ள சுவை மிகும் கனிகளை ஒதுக்கிவிட்டு, காய்களை உண்பதைப் போன்றதாகும்.

11.செய்ந்நன்றி அறிதல்

(பிறர் செய்யும் உதவி மறவாமை)

101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

பிறர்க்கு எந்த உதவியும் செய்யாத போதும், அவர் நமக்கு செய்த எதிர்பாரா உதவிக்கு, வானமும் இப்பூமியும் கூட ஈடாகாது.

102
காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

நம் துன்பத்தின்போது, காலத்தில் பிறர் செய்த உதவி சிறியதெனினும், அது இவ்வுலகைக் காட்டிலும் மிகவும் பெரியது.

103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

பயனை எதிர்பாராமல், அன்பின் பொருட்டு பிறர் செய்யும் உதவியின் பயனால் வரும் நன்மையை ஆராய்ந்தால், அது கடலினும் பெரியதாகும்.

104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

பிறர் செய்த உதவி திணையளவே சிறியதாயினும், அதன் பயனை உணர்ந்தவர், பனை அளவு உதவியென மதித்துப் போற்றுவர்.

105:
உதவி வரைத்தன்று உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

பிறர் செய்த உதவிக்கு கைம்மாறாய் செய்யும் உதவி, முன் செய்த உதவியின் அளவின் தன்மையைப் பொறுத்ததன்று; அவ்வுதவியைப் பெறுவோரின் பண்பைப் பொறுத்தது.

106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

குற்றமற்றவர் நட்பை, ஒருபோதும் மறத்தல் கூடாது; அத்துடன், துன்பத்தில் உதவியவர் நட்பையும் கைவிடுதல் கூடாது.

107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.

துன்பத்தைப் போக்கிட உதவியவரின் நட்புறவை, சான்றோர்கள் தம் எழுப் பிறப்பிலும் நினைவில் வைத்து போற்றுவர்.

108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

பிறர் நமக்குச் செய்த நன்மைகளை மறப்பது அறம் அல்ல; அவர் செய்த தீமைகளை, அப்போதே மறத்தல் நல்லது.

109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்.

ஒருவர் கொலைக்கு ஒப்பான கொடும் துன்பத்தை செய்தவராயினும், அவர் முன்னர் செய்த ஏதேனும் ஓர் உதவியை நினைக்குங்கால், அக் கொடிய துன்பமும் மறந்திடச் செய்யும்.

110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எத்தகு நல்லறத்தையும் அழித்தவர்க்கும்  மீண்டெழுவதற்கு  வழிகள் உண்டாகப்பெறும்; ஆனால், பிறர் செய்த உதவியை மறப்பவர்க்கு ஒரு நாளும் நல்வழி உண்டாக வாய்ப்பதில்லை.

12.நடுவு நிலைமை

(நீதியை நிலைநாட்டும் முறைமை)

111
தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

பாகுபாடின்றி, எல்லோரிடத்தும் நீதியின்பால் நின்று பின்பற்றப்படும் நடுவு நிலைமை எனும் தகுதி ஒன்றே, நன்மை பயக்கும். 

112
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

நீதிநெறி தவறாத நடுவு நிலைமை உடையவரின் பொருட்செல்வம், அவர்தம் தலைமுறை யாவிற்கும், குறைவின்றி பயன் தரும்.

113
நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

நடுநிலை தவறுவதால் அடையப்பெறும் பயன்கள், நன்மையே தருவதாயினும், அப் பயன்களை அப்போதே கைவிடுதல் வேண்டும்.

114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.

ஒருவர் நீதிமிக்கவரா, நீதி அற்றவரா என்பதை அவர் விட்டுச் சென்ற புகழ், பழிச் சொல் ஆகியவற்றால் அறியப்படும்.

115
கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.

தீதும் நன்றும் வாழ்வில் இயற்கையாய் வாய்க்கப்பட்டவை;  அதனால், உயர்வு தாழ்வு இரண்டிலும் நடுவுநிலை பிறழாமையே, சான்றோர்க்கு அழகாகும்.

116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.

ஒருவர் உள்ளத்தால் நடுவுநிலை தவறி, கேடிழைக்க எண்ணுங்கால், அதுவே, அவரது அழிவிற்கான அறிகுறி என்பதை அறிந்திடல் வேண்டும். 

117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

நடுவுநிலைப் பிறழாது அறநெறியோடு வாழும் ஒருவர், அடையும் வறுமை நிலையை, உலகத்தார் தாழ்வாக எண்ண மாட்டார்கள்.

118
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கூடாமை சான்றோர்க்கு அணி.

முள்ளை சமமாக நிறுத்தி, பொருளின் எடையளவை சமன் செய்யும் தராசு போல், ஒரு பக்கமாய் சார்ந்திடாத நடுவுநிலை எனும் அறம் தவறாமையே சான்றோர்க்கு அழகாகும்.

119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள்கோட்டம் இன்மை பெறின்.

ஒருவர் உள்ளத்தில் நடுவுநிலை கோணாத, நீதியை நிலைநாட்டும் உறுதி அமையப்பெறின், அவரது சொல்லிலும் நீதி பிறழாத நடுவு நிலைமை வாய்க்கப்பெறும்.

120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமப்போல் செயின்.

பிறர் பொருளையும் தம் பொருளாய் மதித்து, நேர்மையோடு வியாபாரம் செய்வாராயின், அதுவே வியாபாரம் செய்வோர்க்கான சிறந்த அறநெறியாகும்.

13.அடக்கமுடைமை

(மனம், சொல், செயல்களால் தீமையல்லாது அடக்கம் கொண்டொழுகுதல்)

121
அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம், எனும் உயர்ந்த அறநெறியைப் பின்பற்றுபவர், சிறந்த புகழ்நிலையை அடைவர்; அடங்காமை, அவர்தம் வாழ்வில் இருள் போன்ற துன்பமே சூழும்.

122
காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. 

அடக்கம் எனும் சிறந்தப் பண்பை செல்வமெனக் காத்தல் வேண்டும்; ஏனெனில், அதைவிட ஆக்கம் தரும் சிறந்த செல்வம், இவ்வுலகில் இல்லை.

123
செறிவுஅறிந்து சீர்மைப் பயக்கும் அறிவுஅறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

அடக்கம் எனும் பண்பே அறிவுடைமை, என்பதறிந்து அதன்படி வாழ்வோர் சான்றோரால் மதிக்கப்பெற்று மேன்மை பெறுவர்.

124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

அடக்கம் எனும் அறம் சார்ந்த வாழ்க்கை நெறி தவறாதவரின் பெருமை மலையினும் மிக உயர்ந்ததாகும்.

125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

அடக்கம் எனும் அறம், எல்லோருக்கும் நன்மை தருவதாகும்; அதிலும், செல்வந்தருள் வாய்க்கப்பெறும் அடக்கம் அவருக்கு மற்றுமொரு சீரிய செல்வமாகும்.

126
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

ஆபத்தில், ஆமை தம் ஓட்டுக்குள் புகுந்துக் காத்துக் கொள்ளுதல் போல, ஒருவர் ஐம்பொறிகளையும் அடக்குவாரெனின், அதுவே அவரை எழுப் பிறப்பிலும் தீமைகளிலிருந்தும் காக்கும்.

127
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

ஒருவர் எதைக் காத்திடாவிடினும், முதலில் தம் நாவை அடக்கிக் காத்துக் கொள்ளுதல் வேண்டும்; இல்லையேல், சொற் குற்றத்தில்  சிக்குண்டு தாமே துன்பத்திற்கு ஆளாவர்.

128
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

ஒருவர் பேசிய ஒரேயொரு தீயச் சொல்லேயானாலும், அதனால் விளைந்த துன்பத்தினால், அவர் செய்த மற்ற நல்லறங்களாலும் நன்மை விளையாது போகும்.

129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

தீயினால் சுட்ட புண்ணால் உண்டான வடு, உள்ளே ஆறிவிடும்; ஆனால், நாவினால் கூறிய கடுஞ்சொல்லால் உண்டான மனக்காயம், என்றும் ஆறாது.

130
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

சினத்தை அடக்கி, சிறந்த கல்வியறிவில் தேர்ந்து, அடக்கம் எனும் நற்பண்புடைவரின் வழியில், அறமே எதிர்பார்த்து காத்திருக்கும்.

14.ஒழுக்கமுடைமை

(நல்ல நெறிகளைப் பின்பற்றி வாழும் முறைமை)

அதிகாரம்.14 | அறத்துப்பால் | இல்லறவியல் | குறள்கள் 131-140

131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

எல்லோர்க்கும் மேன்மையைத் தரக் கூடியது ஒழுக்கம்; ஆதலால், அவ் வொழுக்கம் உயிரை விடவும் மேலானதாகப் போற்றப்படும்.

132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

ஒருவர் தன் வாழ்வில் வருந்திப் போற்றிக் காத்துக் கொள்ள வேண்டியது ஒழுக்கம்; எல்லா அறங்களையும் ஆராய்ந்து தெளிந்திருப்பினும், அவருக்கு தலைசிறந்த துணையாவது ஒழுக்கமே.  

133
ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

ஒழுக்கத்துடன் வாழ்பவர் உயர்குடியினராகக் கருதப்படுவார்; ஒழுக்கம் தவறின், இழிகுலத்தினருக்கு ஒப்பானவர் ஆவார். 

134
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

தாம் கற்ற வேதங்களை மறந்தாலும், பார்ப்பனன் மீண்டும் கற்றுத் தெளியலாம்; ஆனால், குல ஒழுக்கத்திலிருந்து விலகினால், தம் குலமே தாழ்ந்ததாகி விடும்.

135
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

பொறாமை குணமுடையவர்க்கு செல்வம் நிலைப்பதில்லை; அது போல், ஒழுக்கம் தவறியவர் வாழ்வில் உயர்வு இல்லை.

136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

மனஉறுதி கொண்ட சான்றோர்கள், ஒழுக்கம் தவறுவதால் உண்டாகப்பெறும் இழிநிலையை உணர்ந்திருப்பதால், அவர்கள் ஒழுக்க நெறியிலிருந்து விலக மாட்டார்கள். 

137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

ஒழுக்கத்தைக் கடைபிடிப்பவர்கள், வாழ்வில் மேன்மை அடைவர்; ஒழுக்க நெறி தவறி நடப்பவர்கள், அடையக் கூடாத பெரும்பழிக்கு ஆளாவர்.

138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

நல்லொழுக்கம் நன்மைக்கு வித்திட்டு நல்வாழ்வைத் தரும்; தீயொழுக்கம் என்றும் தீராதத் துன்பத்தையே விளைவிக்கும்.

139
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

ஒழுக்கம் உடையவர்கள், மறந்தும் கூட தீமை தரும் சொற்களைக் கூற இயலாத பண்புடையவர்கள் ஆவர்.

140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

உலகத்தில் ஒழுக்கமுடைய சான்றோரோடு, ஒன்றி வாழத்தக்க  நற்பண்புகளைக் கற்றுக் கொள்ளாதவர்கள், பல நூல்கள் கற்றவரேயாயினும், அறிவில்லாதவர் ஆவார்.

அடுத்த அதிகாரம் ➤ 15.பிறனில் விழையாமை

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *