Powered By Blogger

81. பழைமை

அதிகாரம் #81 பழைமை
(பழைய நண்பர்களது பிழை பொறுத்தல்)
பொருட்பால் | அங்கவியல் குறள்# 801-810

801
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

பழைமை எனப்படுவது யாதெனில், நெடுநாள் பழகிய நண்பரின் பிழைகளைப் பொருட்படுத்தாமல் தாம் கொண்ட நட்பைப் போற்றி அவருடனான உரிமை மிகுத்த உறவைத் தொடர்வதே ஆகும்.

802
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.

நட்பு பாராட்டுதல் என்பது, நண்பர்களுக்கே உரித்தான உரிமை சார்ந்த செயலாகும்; அதை மதித்து உண்மையான நட்பை போற்றுதல் என்பதானது, சான்றோர்க்கே உரித்தான கடமையாகும்.

803
பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை?

தமக்கு உடன்பாடு இல்லையெனினும், பழகிய நண்பரானவர் உரிமையோடு தமக்குச் செய்ததை மனமுவந்து செய்ததாக விரும்பி உடன்படாவிடின்  அவரோடு உறவாடிய நெடுநாளைய நட்பினால் என்ன தான் பயன்? 

804
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.

நட்பின் உரிமையில், நண்பர் தம்மைக் கேட்காமலே ஒரு செயலை செய்யும்போது, அது நண்பரால் நட்பின் உரிமையோடு விரும்பிச் செய்யப்படுவதால் அறிவுடையவர்கள்  மகிழ்வோடு ஏற்றுக் கொள்வர். 

805
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.

நம் நண்பர் ஒருவர் நாம் வருந்தத்தக்கதான செயலை செய்தால், அது அவருடைய அறியாமையினாலோ, அல்லது மிகுந்த உரிமையினாலோ என்பதை உணர்ந்து கொள்ளல் வேண்டும்.  

806
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

எல்லை மீறாத வகையிலான நட்பின் மதிப்பை உணர்ந்து நடப்பவர்கள், தம் நீண்டகால நண்பர் தமக்கு கேடு விளைவித்தாலும், அதற்காக உரிமை மிகுத்த பழைமையான அவரது நட்பைக் கைவிட மாட்டார்.

807
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

நண்பரானவர், தமக்கு அழிவு ஏற்படுத்துவதான கேட்டினை விளைவித்தாலும், அன்பின் வழிவந்த நெடுங்கால நட்பின் மதிப்பைப் போற்றி, அவருடனான அன்பினின்று நீங்க மாட்டார். 

808
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.

பழகிய நண்பர் மீது பிறர் சுமத்தும் குற்றங்களைக் கேளாமற் புறந்தள்ளி, அவருடனான நட்பைப் போற்றுபவர்க்கு அந்த நண்பர் தீங்கிழைப்பாராயின், அவருடன் பழகிய நாட்கள் எல்லாம் பயனற்றவையாகும். 

809
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.

உரிமை கெடாது நெடுங்காலந் தொட்டும் ஒருவரோடு பழகிய நட்பைக் கைவிடாமல் வாழ்பவரை, அதற்காக அவரது நட்புநெறியை மதித்து இந்த உலகம் விரும்பிப் போற்றும். 

810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.


பழகிய நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவருடனான தம் நட்புரிமையைக் கைவிடாது அவர்களிடம் அன்பு பாராட்டும் குணம் படைத்தவரை பகைவர்களும் விரும்பிப் போற்றுவர். 

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *