(தீங்கு செய்பவரிடத்தும் பொறுமை காத்தல்)
அதிகாரம் 16 | அறத்துப்பால் | இல்லறவியல் | குறள்கள் #151-160
151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
தன்னைத் தோண்டுபவரைத் தாங்கி நிற்கும் இந்நிலம் போல, தம்மை இகழ்ந்து அவமதிப்பவரைப் பொறுத்து வாழ்ந்திடல், தலையாய குணம் ஆகும்.
152
பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனை
மறத்தல் அதனினும் நன்று.
பிறர் செய்யும் தீங்கினை எப்போதும் பொறுத்துக் கொள்ளல் நன்று; அத் தீங்கை மனதிற் கொள்ளாமல், அப்போதே மறந்திடல் அதனினும் நன்று.
153
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
வறுமையினும் வறுமை என்பது விருந்தினரைப் போற்றிட இயலா நிலை; வலிமையிலும் வலிமை என்பதானது அறிவற்றோர் செய்யும் தீமைகளைப் பொறுத்திடல் ஆகும்.
154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
நிறைவான, பெருமைமிகும் குணங்களோடு நிலைத்திருக்க வேண்டுமாயின், பொறுமை எனும் உயர்ந்த பண்பினைப் போற்றி வாழும் தன்மையது வேண்டும்.
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
பிறர் தீமைகளைப் பொறுக்காமல் தண்டிப்பவரை, அறிவார்ந்தவர்கள், மதிப்பதற்கொப்பாகக் கருத மாட்டார். மாறாக, அதனைப் பொறுத்துக் கொள்வாரை பொன்னென மதித்துப் போற்றுவர்.
156
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
தீங்கு செய்தோரை மன்னிக்கும் தன்மையில்லாது, அவரைத் தண்டிப்பதால் வாய்க்கும் இன்பமானது, ஒரு நாள் மட்டுமே. அதனைப் பொறுத்துக் கொண்டோர்க்கு, உலகம் உள்ளளவும் புகழ் நிலைக்கும்.
157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
பிறரால் இழைக்கப்படும் தீமைகளுக்காகத் துயருற்று, தாமும் அவ்வாறே அறமற்ற செயல்களை திரும்பச் செய்யாமல் பொறுமை காத்தல் நல்லது.
158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
ஆணவத்தால் ஒருவர் நமக்குத் தீங்கிழைப்பின், அவரை நாம், நம் பொறுமை எனும் சிறந்த பண்பினால் வென்று விட வேண்டும்.
159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
தீயவர்கள் வெறுக்கத்தக்கச் சொற்களால் தம்மை இகழ்வதைப் பொறுத்துக் கொள்பவர்கள், துறவிகளைப் போன்று தூய்மை உடையவர் ஆவர்.
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
உண்ணாது பசித் தாங்கும் உறுதி மிக்கப் பெரியோரைக் காட்டிலும், பிறர் சொல்லும் தீஞ்சொற்களைத் தாங்கி, பொறுமை காப்பவர் உயர்ந்தவர் ஆவர்.

