Powered By Blogger

54.பொச்சாவாமை

(மறதி எனும் சோர்விலாது வாழ்தல்)

பொருட்பால் | அரசியல் | அதிகாரம் 54

531
இறந்த வெகுளியின் தீதே சிறந்த 
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

அளவற்ற  மகிழ்ச்சிப் பெருக்கின் போது, உண்டாகப்பெறும் மறதியால் வரும் சோர்வு, வரம்பற்ற கோபத்தினும் தீங்கானது. 

532
பொச்சாப்புக் கொல்லும் புகழை; அறிவினை 
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

நாளும், ஒருவரை விடாது வாட்டும் வறுமையானது, அவரது அறிவைக் கொல்வதைப் போன்று, ஒருவரது மறதியானது, அவரது புகழைக் கெடுத்து விடும்.

533
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை; அதுஉலகத்து 
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

மறதியுடையார்க்கு, புகழ் மிகுந்த வாழ்வு இல்லை; அது, உலகின் எத்தகு கற்றறிந்தாரும், ஏற்றுக் கொள்ளத்தக்கதான முடிவாகும். 

534
அச்ச முடையார்க்கு அரண்இல்லை; ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

உள்ளத்துள் பயம் உடையவர்க்கு, அவருக்கான பாதுகாப்பு அரண்கள் இருந்தாலும், அவற்றால் ஒரு பயனும் இல்லை; அதுபோல, மறதி உடையோர்க்கு, எத்தகு நல்ல நிலை வாய்ப்பினும், அதனால், நன்மை ஏதும் இல்லை. 

535
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்று இரங்கி விடும்.

வரக்கூடிய துன்பங்களை முன்னரே அறிந்து, அவற்றை தடுத்திராமல் மறந்து இருந்தவர், பின்னர், துன்பங்கள் வரக் கண்டு, அதற்காக, தன் தவறை எண்ணி வருந்துவர்

536
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை 
வாயின் அதுவொப்பது இல்.

ஒருவரிடத்தே, எப்போதும், மறவாமை எனும் குணம், நீங்காமல் வாய்த்திருக்குமேயானால், அதற்கு ஒப்பான நன்மை வேறெதுவுமில்லை. 

537
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் 
கருவியால் போற்றிச் செயின்.

மறதி இல்லாத மனத்தால், தம் கடமைகளை அக்கறையோடு போற்றிச் செய்பவருக்கு முடியாத செயல் என ஒன்றும் இல்லை.

538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது 
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

சான்றோர்களின் புகழ்தலுக்குரிய செயல்களை பொறுப்புடன் போற்றிச் செய்திடல் வேண்டும்; அவ்வாறு செய்ய மறந்தவர் எத்தனைப் பிறப்பெடுத்தாலும், அவருக்கு நன்மைகள் நிகழ்தல் வாய்ப்பதில்லை.

539
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம் 
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

மகிழ்ச்சிப் பெருக்கால் செருக்குண்டு, தாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய மறப்பவர், முன்னர், கடமைகளை செய்ய மறந்து, அழிந்தவர்களைக் குறித்து எண்ணிப் பார்த்து, தம்மைத் திருத்திக் கொள்ளுதல் வேண்டும். 

540
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.

ஒருவர், தாம் நினைத்த செயல்களை மறவாமல், எப்போதும் எண்ணியவாறு இருந்தாலே, அவர் எண்ணிய குறிக்கோள்கள் யாவற்றையும் அடைவது எளிதாகும்.

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *