அதிகாரம் #76 பொருள் செயல்வகை
(செல்வத்தின் பெருமையும் ஈட்டும் முறைமையும்)
பொருட்பால் | அங்கவியல் | குறள்# 751-760
751
பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்அல்லது இல்லை பொருள்.
மதிக்கத்தகாதவர்களையும் மதிப்பு மிக்கவராய் மாற்றக் கூடியது, அவர்பால் குவிந்துள்ள செல்வத்தைத் தவிர சிறப்புமிக்க பொருள் வேறு எதுவும் இல்லை.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
பணம், பொருள் இல்லாதவர்களை எல்லோரும் இகழ்ந்து பேசுவர்; பணம், பொருள் என செல்வங்களோடு இருப்பவர்களை புகழ்ந்து பேசிப் பெருமைப்படுத்துவர்.
பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
ஒருவரிடத்தே குவிந்துள்ள பணம் என்கிற அணையா விளக்கானது, நினைத்தவிடத்தெல்லாம் தடையின்றி சென்று பகையாகிய இருளைப் போக்கி விடும்.
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீது இன்றி வந்த பொருள்.
ஒருவர் நேர்மையின் வழியில் தீங்கு ஏதுமில்லாமல் சேர்த்து வைக்கும் பொருள், அவர்க்கு அறத்தையும் கொடுத்து இன்பத்தையும் கொடுக்கும்.
755
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
அன்பொடும் அறத்தொடும் அல்லாது, நெறியின்றி வரும் செல்வமானது, தீங்கானது என்பதை உணர்ந்து அதை ஏற்காமல் புறந்தள்ளிவிடல் வேண்டும்.
756
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
மக்களிடமிருந்து வரியாக பெறப்படும் பொருள், சுங்கத்தின் வழியே வருகின்ற பொருள், வென்றெடுத்த பிற நாட்டினின்று கப்பமாக செலுத்தப்பெறும் பொருள் ஆகியன யாவும் அரசினர்க்குரிய பொருள்களாகும்.
757
அருளென்னும் அன்புஈன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
அன்பின் வழியே ஈன்றெடுக்கப்பட்ட அருள் எனப்படும் குழந்தையானது, செல்வம் என்னும் செவிலித் தாயால் வளர்வதாகும்.
758
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
ஒருவர் ஈட்டிய செல்வம் கையில் இருக்கும் போது, அதைக் கொண்டு, தனக்கான ஒரு செயலைச் செய்வது என்பது, அவர் மலை மீதேறி நின்று யானைப் போரைக் காண்பதைப் போல, வலி இலாததும் இலகுவானதும் ஆகும்.
759
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகுஅதனிற் கூரியது இல்.
எதையும் சாதிக்கவல்ல ஆக்கத்தைத் தரக்கூடிய செல்வத்தை ஈட்டுக; பகைவரின் அகங்காரத்தை அறுக்கவல்ல வாளைப் போன்ற கூரிய ஆயுதம் அச் செல்வத்தைத் தவிர வேறு இல்லை.
760
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றனுள் நல்வழி மிக்க நெறியோடு, செல்வமாகிய பொருளை மிகுதியாக சேர்ப்பவர்க்கு ஏனைய அறமும் இன்பமும் ஒருங்கே வாய்க்கப்பெறும்.

