அதிகாரம்#29 | அறம் | துறவறவியல் | குறள்கள்#281-290
281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
பிறரால் இகழப்படக் கூடாதென விரும்புகிறவர், பிறன் பொருள் எதையும் களவாடும் எண்ணமில்லாதவாறு தன் நெஞ்சைக் காத்துக் கொளல் வேண்டும்.
282
உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
பிறன் பொருளை வஞ்சகமாய் தன்வசம் கவர்ந்திட, உள்ளத்தால் எண்ணுதலும், குற்றம் ஆகும்.
283
களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும்.
களவு செய்து பொருளைக் குவிப்பதால், செல்வம் சேருவதைப் போல் தோன்றினாலும், மாறாக, அச்செயலால், தன்னிடமிருந்த செல்வமும் கெட்டழிந்து விடும்.
284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
களவு செய்வதில் ஒருவருக்கு பெருவிருப்பம் உண்டாகப்பெறின், அதன் விளைவால், அவருக்குத் தீராத் துன்பம் வரும்.
285
அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
பிறன் பொருளை அபகரிக்கும் நோக்கத்தில், அவர் சோர்ந்திடும் தருணத்திற்காகக் காத்திருப்பவர்களிடம், அருள்கருதி அன்பு செலுத்தும் பண்பு இருக்காது.
286
அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
பிறன் பொருளை களவு செய்து வாழ்வதில் நாட்டம் கொள்பவர்கள், முறையான வாழ்க்கை நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்திட மாட்டார்கள்.
287
களவு என்னும் காரறிவாண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.
வாழ்க்கையின் அறநெறிகளைக் கடைப்பிடிக்கும் ஆற்றல் உடையவர்களிடம், பிறன் பொருளைக் களவு செய்து வாழும் அறிவற்ற தீயபண்பு இருப்பதில்லை.
288
அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
வாழ்வின் அறநெறிகளைக் கடைப்பிடிப்போரின் உள்ளம் அறவழியிலேயே செல்லும்; பிறன் பொருளைக் களவு செய்து வாழும் நெறியற்றவர் உள்ளம் வஞ்சக வழியில் செல்லும்.
289
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
களவு ஒன்றைத் தவிர வாழ்வில் வேறு நல்ல நெறிகளைத் தெரிந்து அவற்றை நாடாதவர்கள், அறமற்ற செயல்களைச் செய்து தம் வாழ்வைத் தொலைத்து அழிவர்.
290
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.
களவு செய்து வாழ்பவருக்கு உயிர் வாழ்தலும் தவறிடல் கூடும்; களவு செய்யும் எண்ணமே இல்லாதார்க்குப் புத்துலகத்தே புகழ் வாழ்வு வாய்க்கத் தவறுவதில்லை.
◀ அதிகாரம்#28 கூடா ஒழுக்கம்
அதிகாரம்#30 வாய்மை►

