Powered By Blogger

66.வினைத்தூய்மை

(செயல்கள் யாவும் நல்லவை ஆதல்)

2. பொருட்பால் | 2.2. அங்கவியல் | அதிகாரம்: 66

651
துணைநலம் ஆக்கம் தருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.

ஒருவர்க்கு வாய்க்கப்பெறும் துணைவர்களால், வலிமையும் செல்வமும் பெருகும்; அதுவன்றி, அவர் செய்யும் நற்செயல்களால்  விளையும் நன்மைகள், தாம் விரும்பிய எல்லாம் தரும். 

652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

புகழையும், நன்மைகளையும் தராத தூய்மையற்ற செயல்களை எப்போதும் செய்யாமல் விட்டொழித்து விடல் வேண்டும். 

653
ஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.

மேன்மேலும் புகழ்பெற்று உயர்ந்திடும் நோக்கில், முயற்சிகளை செய்பவர், தாம் வாழும் காலத்தே, தம் புகழ் கெடும் விதமான செயல்களை செய்யாமல்  தவிர்த்திடல் வேண்டும். 

654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கஅற்ற காட்சி யவர்.

தெளிந்த அறிவும், தடுமாற்றம் இல்லா நேரிய சிந்தையும் கொண்டவர்கள், தம் துன்பத்தினின்று விடுபடுவதற்காகக் கூட, இழிவான செயல்களை செய்ய மாட்டார்கள்.

655
எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

"என்ன தவறை இப்படிச் செய்தோம்!" என, பின்னர் வருந்துதற்குரிய செயல்களை செய்தல் வேண்டா; ஒருகால், அறியாமல் அத்தகைய செயலைச் செய்திடும் நிலை வந்தால், அவற்றைத் தொடராதிருத்தல் நலம். 

656
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க 
சான்றோர் பழிக்கும் வினை.

பெற்றத் தாய், பசியால் துடிக்கும் வேதனையைக் காணும் நிலையே வந்தாலும், அதற்கென, சான்றோர்கள் பழித்தலுக்குக் காரணமான இழிச்செயலை செய்தல் கூடாது. 

657
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

பழியைச் சுமந்து இழிதொழில் செய்து, ஈட்டிய செல்வ செழிப்பில் வாழ்வதைக் காட்டிலும், சான்றோர் வகுத்துரைத்த நேர்மை தவறாது, கொடும் வறுமையோடு வாழ்தலே மேன்மை மிக்கதாகும். 

658
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.

சான்றோரால் ஆகாதவை  என விலக்கப்பட்ட செயல்களை விட்டு ஒதுக்காமல் செய்பவராயின், அவை பின்னர் நிறைவேறினாலும், அவற்றால் அவருக்குத் துன்பமே விளையும். 

659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.

பிறர் அழுது வருந்தும்படி, தீயவழிகளில் ஒருவர் அடைந்த பொருள், பின்னாளில், தாம் அழுது வருந்தச் செய்து விட்டுப் போய்விடும்; நல்வழியில் ஈட்டிய பொருள், தம்மை விட்டுப் போனாலும், அவை, பின்னாளில் பயன் தரும். 

660
சலத்தால் பொருள் செய்துஏ மார்த்தல் பசுமண் 
கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று.

தீய வழியிலான செயல்களால் பொருளை ஈட்டுதலானது, பசும் மண் கொண்டு செய்த பாத்திரத்தில் நீர் ஊற்றி அதைக் காப்பது போன்றதாகும்.

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *