Powered By Blogger

30.வாய்மை

(உண்மை உரைத்தல் எனும் அறம்)

அதிகாரம்#30 | அறம் 
துறவறவியல் குறள்கள்#291-300

291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

வாய்மை எனப்படுவது யாதெனில், பிறருக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படுத்தாதச் சொற்களைச் சொல்லுதல் ஆகும்.

292
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

குற்றம் இல்லாதவாறு நன்மை விளைந்திடும் எனில், அதற்காக சொல்லப்படும் பொய்மையும், ஆங்கே, வாய்மை என்பதாகக் கருதப்படும்.

293
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

ஒருவர் தன் மனம் அறிந்து பொய் சொல்லல் கூடாது; மாறாக, பொய் சொல்வாராயின், அதனால் அவர்தம் மனமே தம்மை வருத்தி விடும்.

294
உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

ஒருவர் தன் மனம் அறிய பொய் உரைக்க எண்ணாத அறம் கொண்டு வாழ்பவராயின், அவர் உலகத்தார் உள்ளங்களுள் நீங்கா இடம் பெறுவார்.

295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை.

ஒருவர் மனம் பொருந்த வாய்மை உரைக்கும் அறம் கொண்டவராயின், அவர் தவம், தானம் இரண்டையும் செய்வோரினும் சிறந்தவர் ஆவார்.

296

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.

ஒருவர் பொய்யுரைக்காமல் வாழ்வதைப் போன்ற புகழ்மிக்கதான அறவாழ்வு வேறில்லை; அதனால், அவருக்கு  வாழ்வின் எல்லா அறப்பயன்களும் தாமாகவே வாய்க்கப்பெறும்.

297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

பொய்யாமை எனும் அறத்தைப் பின்பற்றி வாழும் ஒருவர், வாழ்வில் செய்ய வேண்டிய பிற அறங்களைச் செய்யாமல் வாழ்ந்தாலும் நன்மையே பயக்கும்.

298
புறம்தூய்மை நீரான் அமையும்; அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

ஒருவர்க்குப் உடல் தூய்மையானது நீரால் கிடைக்கப்பெறும்; அதுபோல, அகத்தூய்மை என்பது வாய்மையால் உண்டாகப்பெறும்.

299
எல்லா விளக்கும் விளக்கல்ல; சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

புறத்தே ஒளியைக் கொடுக்கும் விளக்கு யாவும் விளக்கல்ல; உள்ளத்து இருள் நீக்கும் பொய்யாமை எனும் விளக்கே சான்றோர்க்கான விளக்கு.

300
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்
வாய்மையின் நல்ல பிற.

யாம் உண்மையாகக் கண்ட அறப் பண்புகளுள், வாய்மையை விடவும் எத்தன்மையிலும் சிறந்ததெனக் கூறத்தக்கவை வேறு இல்லை.
 
◀| 29.கள்ளாமை
31.வெகுளாமை |

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *