அதிகாரம்#23 | அறம் | இல்லறவியல் | குறள்கள்#221-230
221
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
223
இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே யுள.
224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்கணவர்.
229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
அடுத்த அதிகாரம் ➤24.புகழ்
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
இல்லாதவர்க்கு ஒன்றைக் கொடுத்து உதவுதலே ஈகைப் பண்பாகும்; மற்றவர்க்குக் கொடுத்தல் என்பது, ஏதேனும் பயனை எதிர்பார்த்து செய்வதாகும்.
222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
பிறரிடமிருந்து நன்மைக்காக பெறுதல் எனினும், இரத்தல் என்பது தீங்கானதே; வானுலகத்துப் பெருமை வாய்க்காது எனினும், இல்லாதவர்க்கு கொடுத்து உதவுவதே சிறந்த அறமாகும்.
223
இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே யுள.
தனது வறுமைத் துயரை பிறர் அறியச் சொல்லிக் கொள்ளாமல், இல்லாதவர்க்கு உதவும் அறப் பண்பு, உயர் குடியிற் பிறந்தார்க்கே உரித்தானதாகும்.
224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
ஈதல் பண்புடையவர்க்குத் தம்மிடம் பொருள் நாடி வரும் இரவலர், அப்பொருளைப் பெறுவதால் முகம் மகிழ்வதைக் காணும் வரையில், அவருக்காக இரக்கங் கொள்வதும் ஒரு துன்பமே ஆகும்.
225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
பசியைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் என்பது ஒருவரின் வலிமை எனில், அவ்வலிமையினும் அவரது பசியைப் போக்கும் ஆற்றல் கொண்டவரின் வலிமை மேலானதாகும்.
226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
இல்லாத வறியவர்களின் கொடிய பசியைத் தீர்க்கும் ஒருவருக்கு, அதுவே தன் பொருளை சேமித்து வைக்கப்பெறும் கருவூலமாகும்.
227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
தான் பெற்ற உணவை எல்லார்க்கும் பகிர்ந்தளித்து உண்ணும் அறம் உடையவரிடம், பசி என்னும் கொடும் பிணி அணுகுவதில்லை.
228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்கணவர்.
இல்லாதவர்க்கு கொடுக்காமல், தாம் ஈட்டிய பொருளை பின் இழக்கும் ஈவிரக்கமற்றவர், அதை வறியவர்க்கு கொடுப்பதால் வரும் இன்பத்தை அறிந்திலாரோ?
229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
ஈட்டிய பொருள் குறைந்திடுமே என்றெண்ணி, அதை பிறருக்கு கொடுக்காமல், தாமே தனித்துண்ணுவது, பிறரிடத்தேக் கையேந்தி இரத்தலை விடக் கொடியது.
230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
இறப்பதை விட துன்பம் வேறில்லை. ஆனால், வறியவர்க்கு கொடுத்து உதவிட இயலாத நிலை வரும்போது, இறந்து போவதும் இனியதேயாகும்.
அடுத்த அதிகாரம் ➤24.புகழ்

