Powered By Blogger

72. அவையறிதல்

அதிகாரம் #72 அவை அறிதல்

(அவையின் தன்மை அறிந்து பேசுதல்)

பொருட்பால் | அங்கவியல் குறள்# 711-720

711
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

ஒவ்வொரு சொல்லின் தன்மையைக் குறித்து, ஆராய்ந்தறிந்து பேசும் நல்ல அறிவுடையவர்கள், அவையில் கூடியிருக்கும் சான்றோரின் தன்மையை நன்கு ஆராய்ந்தறிந்து அதற்கேற்ப பேசுதல் வேண்டும். 

712
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.

சொற்களின் தன்மைக் குறித்து ஆராய்ந்தறிந்து பேசும் நல்லறிவு மிக்கவர்கள், அவையின்கண் பேசும்போது சொற்களால், சொற்குற்றம், பொருட்குற்றம் எதுவும் வந்து விடாமல் தெளிவான தன்மையை நன்குணர்ந்து பேசுதல் வேண்டும். 

713
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.

அவையின் இயல்பை அறியாமல் பேசுவதை மேற்கொள்ளும் ஒருவர், அவையின்கண் பேசும் சொற்களின் தன்மையைக் குறித்து அறியாதவர் ஆவார்; அவர் பேசும் திறமும் இல்லாதவரே. 

714
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.

தம்மைவிடவும் அறிவிற் சிறந்தோர் கூடியுள்ள அவையின்கண், அறிவு மிக்கவராகவும், தம்மிலும் அறிவிற் குறைந்தவர் முன்பாக அவருக்கு விளங்கும்படியான வகையிலும் பேசுதல் வேண்டும். 

715
நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.

அறிவார்ந்தவர்கள் கூடியிருக்கும் அவையில், எல்லார் முன்பும் முந்திச் சென்று பேசாதிருக்கும் அடக்கம் நிறைந்த பண்பானது, நல்லது எனப்பட்ட குணங்கள் எல்லாவற்றுள்ளும் நல்லது ஆகும். 

716
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

பல்துறை அறிவுமிக்க பெரியோர் முன் ஒருவர் திறம்பட உரையாற்றும் போது, அவரது பேச்சில் குற்றம் நிகழ்ந்து அதனால், அவர் சிறுமை அடைவது நல்ல ஒழுக்க நெறியினின்று நிலைதவறி வீழ்வதைப் போன்றதாகும். 

717
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் 
சொல்தெரிதல் வல்லார் அகத்து.

குற்றமறச் சொற்களை ஆராய்ந்து, பொருளை அறிந்திடவல்ல  ஆற்றல் மிக்க அறிஞர்களிடத்தே, அறிவுநூல் பலவும் கற்றறிந்தோரது கல்வியின் பெருமையானது அனைவரும் அறியும் வண்ணம் விளங்கும். 

718
உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் 
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

பிறரது உணர்த்துதல் எதுவும் இன்றி, எப்பொருளையும் தாமே அறிந்துணரும் திறம்பெற்றோர் நிறைந்த அவையின்கண் கற்றறிந்தார் பேசுதல் என்பது, தாமே வளரும் பயிர் நிறைந்த பாத்தியுள் நீரைச் சொரிவதைப் போன்றதாம்.

719
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசெலச் சொல்லு வார்.

நல்லோர் நிறைந்த சபையில், நல்ல கருத்துக்களைக் கேட்போர் மனதிற் பதியப் பேசும் ஆற்றலைப் பெற்றவர்கள், அவற்றைக் கேட்டு உணரும் திறன் இல்லாத அறிவிலிகள் முன்பாக மறந்தும் பேசுதல் வேண்டாம். 

720
அங்கணத்துள் உக்க அமிழ்துஅற்றால் தம்கணத்தர் 
அல்லார்முன் கோட்டி கொளல்.

தனக்கு நிகரான அறிவாற்றல் இல்லாதோர் கூடியுள்ள சபையின் முன்பாக பேசுவது என்பது, தூய்மையற்ற முற்றத்தில் சிந்திய அமிழ்தினைப் போன்று பயனற்றதாகும்.

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *