Powered By Blogger

68.வினைசெயல்வகை

(செயலை செய்யும் முறைமை)

பொருட்பால் | அங்கவியல் 
அதிகாரம்: 68. வினை செயல்வகை (குறள்கள் 671 - 680)

671
சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

ஒரு செயலைச் செய்வதற்காக ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான எல்லை என்பதாவது, அச்செயலை செய்திட மேற்கொள்ளும் துணிவே ஆகும்; அவ்வாறு, துணிந்து முடிவெடுத்த பின்னர் காலந்தாழ்த்தினால் அது தீங்கானதாகும். 

672
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

காலந்தாழ்த்தி செய்யத்தக்க செயல்களை, காலந்தாழ்த்தி செய்திடல் வேண்டும்; நிர்ணயிக்கப்பெற்ற காலத்தில் செய்ய வேண்டிய செயல்களை, காலந்தாழ்த்தாது செய்து முடித்தல் வேண்டும். 

673
ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.

செயலை செய்தற்கு ஏதுவான இடங்களில் எல்லாம், பயன்தரவல்ல எல்லா உபாயங்களையும் கைக் கொண்டு செய்து முடித்தல் நலம்; அவ்வாறு இயலாத இடத்தில், அதற்கான வழியை அறிந்து அதற்கேற்ப செய்து முடித்தல் வேண்டும்.

674
வினைபகை என்றுஇரண்டின் எச்சம் நினையுங்கால்
தீஎச்சம் போலத் தெறும்.

செய்யத் தொடங்கிய செயல், எதிர்கொண்ட பகை ஆகிய இரண்டையும் முற்றாக முடிக்காமல் விட்டு விட்டால், அவை அரைகுறையாக அணையாது விடப்பட்ட எஞ்சியத் தீயைப் போன்று வளர்ந்து கேடு தரும்.

675
பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

ஒரு செயலை செய்யத் தொடங்கும் முன்பே, அதற்குண்டான செல்வம், தேவையான கருவிகள், செயலுக்குத் தகுந்த காலம், செயல்திறம், மற்றும் உரிய இடம், ஆகிய ஐந்தையும் நன்கு ஆராய்ந்து சிந்தித்து செயலாற்றுதல் வேண்டும். 

676
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.

ஒரு செயலைத் தொடங்கும் முன், அதை முடிக்கத்தக்கதற்குரிய அம்சங்கள், செயல்படுத்தும் போது வரக்கூடிய இடையூறுகள், செயலை செய்தபின்னர் விளையக் கூடிய நற்பயன்கள், ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்திடல் வேண்டும். 

677
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.

செயலை செய்பவரது செய்யும் செயல்முறை என்பதாவது, அச்செயலை முன்னமே செய்து அதன் தன்மைகளை நன்கு அறிந்தவருடைய கருத்தை தம் உள்ளத்தால் அறிந்து ஏற்றுக் கொள்வதே ஆகும். 

678
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் 
யானையால் யானையாத் தற்று.

ஒரு செயலைச் செய்யும்போதே மற்றொரு செயலுக்காகவும் செயலாற்றி, அதையும் செவ்வனே செய்து முடிப்பதானது, ஒரு மத யானையைக் கொண்டே மற்றொரு யானையையும் பிடிப்பதைப் போன்றதாகும். 

679
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

ஒரு செயலை செய்யும்போது நண்பர்களுக்கு உதவியாதலை விடவும், எதிரிகளிடம் நட்பு பாராட்டி அவர்களை தம்முடன் பொருந்தச் சேர்த்துக் கொள்வதே விரைந்து செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். 

680
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.

வலிமை குறைந்தவர்கள், தம்மிலும் வலிமை மிக்கப் பெரியவர்களின் ஆளுமையால், தம்மைச் சார்ந்தவர்கள் நடுங்குவதற்கு அஞ்சி அவ்விடம் வேண்டிய பலன் கிடைக்குமாயின் வலிமை மிக்க அப் பெரியவர்களைப் பணிந்து  ஏற்றுக் கொள்வர். 

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *