Powered By Blogger

77. படைமாட்சி

அதிகாரம் #77 படைமாட்சி
(ஒரு நாட்டின் படையின் சிறப்பு)
பொருட்பால் | அங்கவியல் குறள்# 761-770

761
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.

எல்லா வகை படைப்பிரிவுகளைக் கொண்டதாய், போர்க்களத்தில் நேரும் துன்பங்கட்கு அஞ்சாமல், அவற்றை எதிர்கொண்டு போரில் வெற்றி கொள்ளும் படையானது அரசின் செல்வங்களுள் எல்லாம் தலைசிறந்ததாகும்.

762
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக்கு அல்லால் அரிது.

போரில் பெருஞ்சேதமுற்று அழிவைக் கண்ட போதும், அத்துன்பத்தை பொருட்படுத்தாத அஞ்சா மனஉறுதி என்பதானது பழம்பெருமை மிக்கதான படையைத் தவிர வேறெந்த படைக்கும் வாய்ப்பதானது அரிதாகும். 

763
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.

கடல்போல் பேரொலி எழுப்பி, பகைமை காட்டும் எலிகள்வீறுகொண்டெழும் பாம்பின் மூச்சின் முன் என்னவாகும்? அதுபோல், மனதளவில் எலிகளைப் போன்ற வீணர் படை, பாம்பைப் போல் வீறுகொண்டு  சிலிர்த்தெழும் வீரர்களின் படையின்முன் வீழ்ந்து கெடும்.  

764
அழிவின்றி அறைபோகாது ஆகி வழிவந்த
வன்கண் அதுவே படை.

எத்தகு நிலையிலும் அழிவில்லாததும், பகைவரின் வஞ்சகத்திற்கு துணை போகாமலும், தொன்றுதொட்டு வந்த வீரத்தை உடையதுமாய் திகழ்வதுவே படையாகும். 

765
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை.

உயிர் பறிக்கும் எமனே சினங்கொண்டு எதிர்த்து வந்தாலும், அதை கூடி எதிர்கொண்டு தீரத்துடன் போரிடவல்ல ஆற்றல் உடையதே படை ஆகும். 

766
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.

வீரம் மானம் முன்னோர் காட்டிய நல்வழி நடத்தல் அரசினரின் நம்பிக்கைக்கு உரியவராக திகழுதல் என இந்நான்கு பண்புகளும் படைக்குரிய பாதுகாப்பு அரண்களாகும். 

767
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.

தன்னை நோக்கி முதலாவதாக வரும் எதிரிப் படையுடனான போரை எதிர்கொண்டு நின்று, அதைத் தாங்கித் தகர்த்து, முன்னேறிச் செல்லவல்ல ஆற்றலைப் பெற்றதே படை என்பதாகும். 

768
அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.

போர் செய்யும் படையின் வீரம், பகைவரின் தாக்குதலை எதிர்கொண்டு தகர்க்கும் வல்லமை ஆகிய இரண்டும் இல்லையெனினும் கட்டுப்பாடு மிக்கதான அப்படையின்  அணிவகுப்பின் அழகால் பெருமை பெறும். 

769
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் 
இல்லாயின் வெல்லும் படை.

ஒரு நாட்டின் படை அளவிற் சிறுத்து விடாமலும், தலைவன் மீது மனதின் நீங்கா வெறுப்பிற்கு ஆட்படாமலும், வறுமை நிலையில் வீழ்ந்து விடாமலும் விளங்குமாயின் அப்படை வெற்றி பெறும். 

770
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.

நெடுங்காலமாக நிலைத்த வீரர்களை நிரம்பக் கொண்டிருந்தாலும், நல்ல தலைமை இல்லையெனில், அப்படை போரில் நிலைத்து நிற்க முடியாது. 

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *