(நீதி தவறும் ஆட்சியின் கொடுமைகள்)
பொருட்பால் | அரசியல் | அதிகாரம் 55
551
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்துஒழுகும் வேந்து.
குடிமக்களைத் துன்புறுத்தும் விதமாக, அவர்களிடத்தே, அறமின்றி ஆட்சி செய்யும் அரசர், கொடும் கொலைத் தொழில் செய்வோரைக் காட்டிலும், கொடியவர் ஆவர்.
552
வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
அரசன், தன் ஆட்சி அதிகாரத்தால், குடிமக்களிடம் பல வகையில், பொருளைப் பறிப்பது என்பதானது, கொள்ளையர்கள், வழிமறித்து ஆயுதங் கொண்டு மிரட்டி, பொருளைக் கேட்பதைப் போன்றதாகும்.
553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
நாட்டில் நிகழும், நன்மை தீமைகளை, நாள்தோறும் ஆராய்ந்து அறிந்து, அதற்கேற்ப, நீதி முறைகளின்படி, முறைப்படுத்தாத அரசு, நாள்தோறும் கெட்டொழிந்து விடும்.
554
கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
நாட்டின் நிலை குறித்து அறிந்திராமல், முறை தவறி ஆட்சி நடத்தும், கொடுங்கோல் ஆட்சியாளர், தன் நாட்டின் நிதி ஆதாரங்களையும், குடிமக்களின் நன்மதிப்பையும், ஒருங்கே இழப்பர்.
555
அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
நீதி முறையற்ற, கொடுங்கோல் ஆட்சியினால் துன்பப்பட்டு, பொறுக்கவியலாமல், மக்கள் அழுது சிந்தும் கண்ணீரே, அரசின் செல்வத்தைக் குலைத்து, அந்த ஆட்சியையே அழிக்கும் ஆயுதமாகிவிடும்.
556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அஃதுஇன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.
நாடாளும் ஆட்சியாளர்க்கு, புகழ் நிலைத்திருக்க காரணமாக அமைவது, அவர்களது, நேர்மை மிக்க செங்கோன்மை தவறாத நிர்வாகமே ஆகும்; அஃது இல்லையேல், ஆட்சியாளரின் புகழ் நிலைக்காமற் போகும்.
557
துளியின்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
மழை இல்லாமற் போனால், உலக மக்கள் எத்தகைய துயரங்களை அனுபவிப்பார்களோ, அத்தகைய துயரங்களை அரசின் நேர்மையற்ற ஆட்சியினால், நாட்டு மக்களும் அனுபவிப்பார்கள்.
558
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்.
வறுமையில்லா நிலையாயினும், முறைதவறி, ஆள்வோரின் கொடுங்கோல் ஆட்சியில், மக்கள் வாழ்தலானது, வறுமைத் துயரோடு வாழ்வதைக் காட்டிலும், பொருள் வளத்துடன் வாழ்தல், துன்பம் மிக்கதாகும்.
559
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
அரசன், நேர்மை தவறி, தன் நாட்டை ஆட்சி புரிவானாயின், அந்நாட்டில், பருவ மழையும் தவறி, மழை பொழியாமல் போகும்.
560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
அரசன் அறம் தவறிப்போய், தன் நாட்டை முறைப்படி காக்கத் தவறினால், அந் நாட்டின் பால் வளம் குன்றும்; ஞானியர், அறிவு நூல்களை மறந்திட, தொழில்கள் நசிந்து ஒழியும்.

