(அஞ்சுதற்குரிய செயல்களைச் செய்யாமை)
பொருட்பால் | அரசியல் | அதிகாரம் 57
தக்காங்கு நாடித் தலைச் செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
நாட்டில் நடக்கும் குற்றங்களை, நடுநிலையோடு ஆராய்ந்து, அவை மீண்டும் நிகழாமைக்காக, குற்றங்களுக்கேற்றவாறு, தண்டனை வழங்குபவனே அரசன்.
562
கடிதுஓச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
நெடுங்காலம், ஆட்சி நிலைபெற விரும்பும் ஆட்சியாளர், நாட்டில் குற்றங்களுக்காக கண்டிக்கும் போது, தண்டனையை மிகையாக அளிப்பது போன்று கடுமைகாட்டியும், பின் தண்டனை அளவை, முறைப்படுத்தி சரியான வரம்பிலும், அளித்தல் வேண்டும்.
563
வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
நாட்டு மக்கள் அஞ்சும்படியாக நடத்தப்பெறும் கொடுங்கோல் ஆட்சி, விரைவில் கவிழ்ந்து அழிவது என்பது உறுதி.
564
இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
தம்மை ஆள்பவர்கள், மிகவும் கொடியவர்கள் என, குடிமக்களால் வெகுண்டு கூறப்படும் கடுஞ்சொல்லுக்கு ஆளாகும் ஆட்சியானது, பெருமை குலைந்து, ஆயுள் குறைந்து, விரைந்து கெடும்.
565
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
தம்மைத் தேடி வருவோர்க்குக் காண இயலாதவாறும், பார்ப்பதற்கு கடுகடுத்த முகத்தோடும் இருப்பவரது பெரும் செல்வமானது, பேய்த் தோற்றமாகிய அஞ்சத்தக்கதான தன்மையதாகும்.
566
கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடும்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடும்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
நாட்டின் அரசன், கடுஞ்சொல் கூறுபவனாகவும், குடிமக்கள்பால், கருணைக் கண்ணோட்டம் இல்லாதவனாகவும் இருப்பவனாயின், அவனது அரசின் பெருஞ்செல்வம், பல்கிப் பெருகி நிலைக்காமல் அப்போதே அழிந்து விடும்.
567
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
கடுஞ்சொல்லும், வரம்பு மீறிய முறையற்ற தண்டனையும், அரசின் பகைவரை வெல்வதற்கான, வலிமை எனும் ஆயுதத்தைத் தேய்த்தொழிக்கும், அரம் எனும் கருவியாக அமைந்து விடும்.
568
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.
அமைச்சர், மற்றும் தன், அமைச்சின் சகாக்களோடு கலந்து பேசி, செயலாற்றும் எண்ணமில்லாது, சினத்திற்கு ஆளாகி, அனைவரிடத்தும், சீறும் குணம் கொண்டொழுகும் அரசனின் ஆட்சி, செல்வ வளம் குன்றி வீழ்ந்து விடும்.
569
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
தமக்கு நெருக்கடி வரும் முன்பே, தனக்கும், நாட்டிற்கும், உரிய பாதுகாப்பு அரண்களை செய்து கொள்ளாத அரசன், போர் வந்த பின்னர், அதற்காக, அச்சம் கொண்டு விரைவில் வீழ்ந்து விட நேரிடும்.
570
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
மக்களை அச்சுறுத்தும் விதத்தில், கொடுங்கோல் ஆட்சி நடத்தும் அரசன், தன் அமைச்சில், கல்வி அறிவற்றவர்களை தமக்குப் பக்கபலமாக வைத்துக் கொள்வான்; அதைவிடவும், பூமிக்கு பாரம், வேறெதுவும் இல்லை.

