Powered By Blogger

35.துறவு

(நிலையில்லாப் பொருள் மீதான பற்றுகளைத் துறத்தல்)

அதிகாரம்#35 | அறம் | துறவறவியல் | குறள்கள்#341-350

341
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

ஒருவர் எந்தந்தப் பொருளின் மீதான ஆசையைத் துறந்து விலக்குகின்றாரோ, அந்தந்தப் பொருள்களினால் அவருக்குத் துன்பங்கள் வருவதில்லை.

342
வேண்டின்உண் டாகத் துறக்க; துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.

துன்பமில்லா வாழ்வு வேண்டின், எல்லாப் பொருட்கள் மீதான பற்றினைத் துறந்திடல் வேண்டும்; அதனால், இங்கே பெறக் கூடிய இன்பங்கள் பலவும் உள.

343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.

ஐம்புலன்களையும் அடக்குதல் வேண்டும்; அவற்றிற்கென, வேண்டிய பொருள் அனைத்தையும் ஒருசேரக் கைவிடுதலும் வேண்டும்.

344
இயல்பாகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை 
மயலாகும் மற்றும் பெயர்த்து.

தவம் செய்தற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல், இயல்பான ஒன்றாகும்; பற்று உடையவராய் இருப்பின், மீண்டும் ஆசை மயக்கத்தைத் தந்து விடும்.

345
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை?

பிறப்பால் வந்த துன்பத்தைப் போக்க முயலும் துறவிகட்கு, அவர்தம் உடலே மிகையான பொருளாக இருக்கும்போது, அதைவிட மேலும் சுமையாக வேறு தொடர்புகள் எதற்காகவோ?

346
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

நான், எனது என்கிற ஆணவத்தை ஒழித்தவர், வானுலகப் புகழ் பெற்றவரையும் மிஞ்சும் வகையில் உலகளாவிய உயர் புகழ் பெறுவார். 

347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

ஆசைகளை விட்டு விடாமல், பற்றிக் கொண்டோரைத் துன்பங்களும் விடாது பற்றிக் கொண்டு விடும்.

348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

ஆசைகளை முற்றிலுமாகத் துறந்தவர்களே உயர்ந்தவராவார். அதனின்றுத் தவறுவோர், அறியாமை எனும் வலையில் அகப்பட்டவர் ஆவார். 

349
பற்றற்ற கண்ணே பிறப்பு அறுக்கும்; மற்று
நிலையாமை காணப் படும்.

ஆசைகளை முற்றாகத் துறந்தவர்க்கே, பிறப்பினால் விளையும் இன்ப துன்பங்கள் வாராது; இல்லையேல், இன்பமும் துன்பமும் மாறிமாறி வந்து, வாழ்வில் நிலையில்லாத் தன்மையது நிலவும்.

350
பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

எப்பொருளின் மீதும், பற்றில்லாதவரிடத்தே பற்று கொண்டு, நட்பு கொள்க; அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதலானது, தம் பற்றுக்களை விடுதற்கு உதவும். 

◀|அதிகாரம் 34.நிலையாமை |
| அதிகாரம் 36.மெய்யுணர்தல்|►

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *