Powered By Blogger

26.புலால் மறுத்தல்

(ஊன் உணவை உண்ணாதிருத்தல்)

அதிகாரம்#26 | அறம் | துறவறவியல் | குறள்கள்#252-260

251
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ங
னம் ஆளும் அருள்?

தன் உடலை வளர்த்திட, பிற உயிரது உடலை உணவாகக் கொள்கிறவர் எப்படி கருணை உள்ளம் உடையவராய் இருப்பார்?

252
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

பொருளைப் போற்றிக் காக்கும் அறம் இல்லாதவர்க்குப் பொருளுடையவர் எனும் சிறப்பு இல்லை; புலால்உண்பவர் அருள் உடையவர் எனும் சிறப்பை அடைய மாட்டார்.

253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

போரில் கொலைக்கான படைக் கருவியைக் கொண்டவரின் உள்ளம் போன்று, புலால் உண்பவர் உள்ளமும் இரக்கமெனும் நன்மையை எண்ணாது.
 
254
அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.

அருள் என்பது பிற உயிரைக் கொல்லாமை; அருளல்லது என்பது பிற உடலை உண்ணுதல். அது, கொன்ற ஊண் உடலை உண்ணுதல் பாவம் என்பதாகும்.

255
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

புலால் உண்ணாமை எனும் அறத்தினால், உயிர்கள்  பலவும் வாழ்கின்றன. உயிர்க் கொன்று உணவாய்க் கொள்வோரை, நரக உலகம் விழுங்கும்; பின் வெளியேயும் விடாது.

256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

உண்பதற்காக உலகினர் பிற உயிரைக் கொல்லாதிருப்பின், புலாலை விலைக்கு விற்பவர் எவரும் இருக்க மாட்டார்.

257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்.

புலால் என்பது பிற உயிரின் உடற்புண் என்பதை அறிவால் உணர்ந்தவர்கள் அதை உண்ணுதல் கூடாது.

258
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

குற்றமற்ற அறிவுடைய சான்றோர், ஓர் உயிரிலிருந்து பிரிக்கப்பட்ட  ஊன் உடலை உண்ண மாட்டார்கள்.

259
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.

நெய் போன்ற பொருட்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகள் செய்வதை விட, ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமை நல்லது.

260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

எந்த ஓர் உயிரையும் கொல்லாதவர், புலாலை உண்ணாது  வாழ்கின்றவர் யாவரையும், உலகின் எல்லா உயிர்களும் கைக்கூப்பி வணங்கும்.

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *