Powered By Blogger

33.கொல்லாமை

(பிற உயிர்களைக் கொலை செய்யாமை)

அதிகாரம்#33 | அறம் | துறவறவியல் | குறள்கள்#321-330

321
அறவினை யாதெனின் கொல்லாமை; கோறல்
பிறவினை எல்லாம் தரும்.

அறச்செயல் எனப்படுவது, பிற உயிர்களைக் கொல்லாமை; உயிர்களைக் கொல்லும் செயலை செய்பவர் வாழ்வில், பாவ வினைகள் எல்லாம் சேரும்.

322
பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

இருப்பதை எல்லோரும் பகிர்ந்து உண்ணச் செய்து, பல உயிர்களைக் காக்கும் பண்பானது, சான்றோர் வகுத்தவற்றுள் எல்லாம் தலைசிறந்த அறம் ஆகும்.

323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

நல்ல அறங்கள் பலவற்றுள், கொல்லாமை என்பது இணையற்ற சிறப்புடையது; அதற்கு அடுத்து சிறந்தது பொய்யாமை எனும் அறம் ஆகும். 

324
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

எந்த ஓர் உயிரையும் கொல்லுதல் கூடாது என்ற நெறியைக் காப்பதுவே நல்ல அறமாகப் போற்றப்படும்.

325
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

உலகவாழ்வின் நிலை கண்டு அஞ்சி, துறவு கொள்வோரை விடவும், கொலைப் பழிக்கு அஞ்சி, கொல்லாமை எனும் அறத்தைப் போற்றி வாழ்பவரே உயர்ந்தவராவர்.  

326
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

கொல்லாமை எனும் அறநெறி கொண்டு வாழும் ஒருவரின் பண்பை எண்ணி, மரணம் கூட அவரது உயிரைப் பறித்துச் செல்லத் தயங்கும். 

327
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது 
இன்னுயிர் நீக்கும் வினை.

தன் உயிர் போகும் நிலையில் இருந்தாலும், பிற உயிரைப் பறிக்கும் செயலைச் செய்திடல் கூடாது.

328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.

கொலை செய்வதால் செல்வம் கிடைத்து, நன்மையுண்டாகப் பெறுவதாக இருப்பினும், சான்றோர்க்கு, கொலையால் வரும் அந்த நன்மை மிகவும் இழிவானதாகும். 

329
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து. 

கொலையைத் தொழிலாகச் செய்பவர்கள், அத் தொழிலின் கீழ்மையை அறிந்த சான்றோர்களிடத்தே, இழிவான  செயல்களைச் செய்பவராகக் கருதப்படுவர்.

330
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

நோய் மிகுத்த உடலோடு வறுமைப் பீடித்த தீய வாழ்வு வாழ்பவர்கள், முன்னர், கொலைகள் செய்து உயிர்கள் பலவும் உடல்களினின்று நீங்கச் செய்தவர்கள் எனப் பெரியோர் கூறுவர்.

◀|முந்தைய அதிகாரம் 
32.இன்னா செய்யாமை|

|அதிகாரம் 34.நிலையாமை|

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *