Powered By Blogger

18.வெஃகாமை

(பிறன் பொருளைக் கவர்ந்திட எண்ணாமை)

அதிகாரம்#18 | அறம் | இல்லறவியல் | குறள்கள்#171-180

171
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

ஒருவர் நடுவுநிலை தவறி, பிறர் பொருளைக் கவர்ந்திட எண்ணுவாராயின், அவர்தம் குடியும் அழிந்து குற்றப் பழியும் வந்து சேரும்.

172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.

நீதி தவறுவதற்கு அஞ்சும் குணமுடைய சான்றோர்கள், பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வதால் வரும் பயனுக்காக, அத்தகைய பழிக்கத்தக்கதான செயல்களைச் செய்ய மாட்டார்.

173
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டுபவர்.

அறவழியின் பயனால் வரும் நிலையான இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லா இன்பத்திற்காக, ஒருபோதும் அறம் தவறிய செயல்களைச் செய்ய மாட்டார்.

174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.


ஐம்புலன்களை அடக்கி வாழும் அறிவார்ந்தவர்கள், வறுமையில்  வீழ்ந்தாலும், பிறர் பொருளைக் கவர்ந்திட எண்ண மாட்டார்கள்.

175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.


பிறன் பொருளைக் கவர்ந்திடும் அறமற்ற எண்ணமுடைய  ஒருவருக்கு, பரந்த நுண்ணறிவு இருந்து, அதனால் என்ன பயன்?

176
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.


அருள் எனும் அறவழியை விரும்பி, அதன் வழிச் செல்பவரே ஆயினும், வழிதவறி, பிறர் பொருளை அடையும் நோக்கில் குற்றங்கள் செய்வாராயின், கெட்டழிவார்.

177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்.


பிறர் பொருளைக் கவர்ந்திட எண்ணுதல் கூடாது; ஏனெனில், பிறர் பொருளை அடைவதன் பயனால் வாழ்வில் உயர்வேதும் விளையப் போவதில்லை.

178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.


தனது செல்வ வளம் குறையாதிருக்க வழி யாதெனில், பிறர் பொருளையும், தாம் கவர்ந்திட எண்ணாதிருத்தலே ஆகும்.

179
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந்து ஆங்கே திரு.


பிறர் பொருளைக் கவர்ந்திட எண்ணாமை எனும் அறநெறி கொண்டு வாழும் சான்றோர்க்கு, அவர்தம் திறனுக்கேற்ப செல்வம் வந்து சேரும்.

180
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு.

பின்விளைவை எண்ணாது, பிறர் பொருளை அடைய எண்ணுதல் அழிவைத் தரும்; அத்தகு எண்ணமில்லாப் பெருமை கொண்டோரின் செல்வமோ, வெற்றியைத் தரும்.

அடுத்த அதிகாரம் 19.புறங்கூறாமை

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *