(செயலாற்றுதலில் மன உறுதி)
661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
662
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
பழுதுபடும் செயலைச் செய்யாமல் இருப்பதுவும், மேற்கொண்ட செயல் பழுதுபடும் நிலை வந்தாலும் அதற்காக மனம் தளராமல் இருப்பதுவும், வினைத்திட்பம் குறித்து நன்கு ஆராய்ந்த அறிவு மிக்கவர்களின் கொள்கையாகும்.
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்.
திட்டமிடப்பட்டவாறு ஒரு செயலை செய்து முடித்த பின்பு, அதுபற்றி வெளிப்படுத்துவதே ஆளுமை ஆகும்; செயலை முடிக்கும் முன்பே அதுபற்றி தெரியும்படி செய்வதானது நீங்காத துன்பத்தைத் தரும்.
664
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
ஒரு செயலை இப்படிச் செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்று வார்த்தைகளால் சொல்லுதல் என்பது யாவர்க்கும் எளிது; ஆனால், சொன்னவாறு அச்செயலை செய்து முடித்தல் என்பது அரிது.
665
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
தமது சிறந்த எண்ணங்களாலும், செயல் உறுதியோடும் பெருமைமிக்கவாறு பணியாற்றும் அமைச்சரது வினைத்திட்பமானது ஆளும் அரசர்க்கும் எய்தப்பெற்று அனைவராலும் போற்றப்பெறும்.
666
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
ஒருவர் தாம் எண்ணிய செயலை திறம்பட செய்து முடிப்பதில் தம் மனதின்கண் உறுதி மிக்கவராக இருப்பாராயின், அவர் எண்ணிய செயலை எண்ணியவாறே செவ்வனே செய்து முடிப்பர்.
667
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
ஒருவரது உருவத்தைக் கண்டு அவரை இகழ்ந்திடல் கூடாது; உருளும் பெரிய தேர்ச் சக்கரங்களைத் தாங்கும் மிகச் சிறியதான அச்சாணியைப் போன்று பெரும் திறம் கொண்டோர் இவ்வுலகில் உண்டு என்பதை உணர்ந்திடல் வேண்டும்.
668
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
உறுதிமிக்க மனதால் நன்கு ஆராய்ந்து தெளிவான திட்டத்துடன் செய்வதென ஏற்றுக் கொண்ட ஒரு செயலை, எவ்விதத் தளர்வின்றி தாமதமுமின்றி செய்து முடித்திடல் வேண்டும்.
669
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
எண்ணிய செயலைத் துவங்கி செய்திடும்போது வருகின்ற துன்பத்தைப் பொருட்படுத்தாது, அச்செயலை செய்தபின் அதனால் விளையப்போகும் இன்பத்தைக் கருத்திற் கொண்டு துணிவுடன் செய்து முடித்தல் வேண்டும்.
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
ஒருவர் எத்தனை வகை உறுதி மிக்கவராக இருப்பவராயினும், அவர் செய்ய வேண்டியுள்ள செயல்களில் மன உறுதி அற்றவராய் இருப்பின் அவரை இவ்வுலகம் மதிப்பதில்லை.

