அதிகாரம் #70 மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
(அரசருடனான இணைந்த செயல்படு முறைமை)
பொருட்பால் | அங்கவியல் | குறள்# 691-700
691
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
மாறுபடும் மனநிலை கொண்ட அரசரோடு இயைந்து பணியாற்றுவோர், அவரிடத்தே அதிகம் நெருங்கிடாமலும், மிகவும் விட்டு விலகிடாமலும் நெருப்பினருகே குளிர்காய்தலைப் போன்று இடைநிலையோடு இருந்து பழகுதல் வேண்டும்.
692
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்.
அரசர் விரும்புகின்ற யாவற்றையும், அவரோடு பழகுபவர் விரும்பாமல் இருப்பது, அந்த அரசராலேயே அவருக்கு நிலையான செல்வத்தினைப் பெற்றுத் தரும்.
693
போற்றின் அரியவை போற்றல், கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
ஆட்சியாளருடன் பழகுபவர், தம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமாயின், கடும் குற்றங்கள் எதுவும் நேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தவறு நேர்ந்த பின்னர், தம் மீதான சந்தேகத்தைத் தெளிவிப்பதானது, யாவர்க்கும் அரிதாகும்.
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும், அவித்தொழுகல்
ஆன்ற பெரியார் அகத்து.
ஆளுமை மிக்க பெரியவர்கள் நிறைந்த அவையில், அவர்கள் முன்பாக, பிறர் காதருகே சென்று பேசுவதையும், அவர்களோடு சேர்ந்துகொண்டு நகைப்பதையும் தவிர்த்து, தம் மாண்பைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.
695
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
ஆட்சியாளர் பிறருடன் மறைபொருள் பேசும்போது, அதுபற்றி அவரே தாம் அறியத் தந்தால் ஒழிய, அது யாதென்று அறியும் நோக்கில் மறைந்திருந்து ஒட்டுக் கேட்பதும் அதுபற்றி பிறரிடம் வினவுதலும் கூடாது.
696
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.
அரசரின் மனநிலை பற்றிக் குறிப்பறிந்து ஏற்றக் காலத்தையும் தேர்ந்தெடுத்து, அவர் வெறுத்தற்குரியவற்றைத் தவிர்த்து, விரும்புதற்குரியவற்றை மட்டும் அவர் விரும்பும் விதமாக சொல்லுதல் வேண்டும்.
697
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.
ஆட்சியாளர் கேட்காத போதிலும் பயன் தருவனவற்றை மட்டும் அவரிடத்தே சொல்லுதல் வேண்டும்; அவரே கேட்பினும்கூட, பயனற்றவற்றை எப்போதும் சொல்லுதல் கூடாது.
698
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.
ஆட்சிப் பொறுப்பிலிருப்பவரைக் குறித்து, "அவர் எமக்கு வயதில் இளையவர், உறவின்முறையால் வேண்டியவர்", என்றெல்லாம் இகழ்வாக எண்ணாமல் அவர் வகிக்கும் பதவியின் பெருமை பொருந்துமாறு பண்புடன் நடந்து கொள்ளல் வேண்டும்.
699
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
சலனமில்லாத் தூய அறிவுடையவர்கள், தாம் ஆட்சியாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மதிப்பு மிக்கவர் என்றெண்ணி ஆட்சியாளர் விரும்பாத செயல்களை ஒருபோதும் செய்யத் துணிய மாட்டார்.
700
பழையம் எனக்கருதி பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
ஆட்சியதிகாரப் பொறுப்பில் உள்ளவரோடு, தமக்கு நீண்டகால நட்பும் தொடர்பும் உள்ளது என்ற நோக்கத்தில் தகாத செயல்களைச் செய்வதற்கான உரிமை கேடாய் முடியும்.

