அதிகாரம்.21 | அறம் | இல்லறவியல் | குறள்கள்201-210
201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
தீயவர்கள் தீமையெனும் செருக்கை செய்வதற்கு அஞ்ச மாட்டார்கள்; சான்றோர்களோ, அவ்வாறு தீமைகள் செய்ய அஞ்சுவர்.
202
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
தீய செயல்கள் செய்பவருக்கேத் தீமையைத் தருவன; ஆதலால், அவற்றைத் தொட்டாற் சுடும் தீயினும் கொடியதெனக் கருதி, தீமைக்கு அஞ்சுதல் வேண்டும்.
203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
தமக்கு தீமை செய்தவர்க்கு அத்தீமையை திரும்ப அவருக்கு செய்யாதிருத்தலே, எல்லாவற்றுள்ளும் முதன்மையான அறிவு ஆகும்.
204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ஒருவர் மறந்தும் பிறர்க்குத் தீங்கிழைக்க எண்ணலாகாது; அவ்வாறு எண்ணுங்கால், அறமே அவரைச் சூழ்ந்து கொண்டு கேடு தரும்.
205
இலன் என்று தீயவை செய்யற்க, செய்யின்,
இலனாகும் மற்று பெயர்த்து.
தான் ஒரு வறியவன் என்பதால், தீயவை செய்தல் கூடாது; அவ்வாறு செய்தால், மேலும் அவனை வறுமை சூழ்ந்து வருத்தும்.
206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
துன்பத்தினால் தீமைகள் சூழ்ந்து தம்மை வருத்துவதை விரும்பாதவர், அத் தீங்குகளைப் பிறர்க்கும் செய்தல் கூடாது.
207
எனைப் பகையுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
எத்தகைய பகையையும், எதிர்கொண்டு தப்பித்து வாழ்ந்து விடலாம்; பிறர் செய்யும் தீமைகள் தமக்கே பெரும் பகையாகி, பின்தொடர்ந்து வந்து துன்புறுத்தும்.
208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
பிறர்க்குத் தீங்கிழைப்பதால் வரும் கேடு என்பது, ஒருவரின் நிழல், அவரை விட்டு விலகாமல் பின் தொடர்ந்து, அவரது காலடியில் ஒட்டியிருப்பது போன்றதாகும்.
209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
தன்னைத் தானே விரும்பிப் போற்றுகின்றவர், எத்தனை சிறியதான தீங்காயினும், அதை பிறர்க்கு செய்திடல் கூடாது.
210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
தவறான நெறியில் சென்று, பிறர்க்கு தீங்கு இழைக்காதவர்களுக்கு, எந்த கேடும் விளைவதில்லை என்பதை அறிந்திடல் வேண்டும்.
அடுத்த அதிகாரம் ➤22.ஒப்புரவறிதல்

