Powered By Blogger

12.நடுவு நிலைமை

(நீதியை நிலைநாட்டும் முறைமை)

111
தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

பாகுபாடின்றி, எல்லோரிடத்தும் நீதியின்பால் நின்று பின்பற்றப்படும் நடுவு நிலைமை எனும் தகுதி ஒன்றே, நன்மை பயக்கும். 

112
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

நீதிநெறி தவறாத நடுவு நிலைமை உடையவரின் பொருட்செல்வம், அவர்தம் தலைமுறை யாவிற்கும், குறைவின்றி பயன் தரும்.

113
நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

நடுநிலை தவறுவதால் அடையப்பெறும் பயன்கள், நன்மையே தருவதாயினும், அப் பயன்களை அப்போதே கைவிடுதல் வேண்டும்.

114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.

ஒருவர் நீதிமிக்கவரா, நீதி அற்றவரா என்பதை அவர் விட்டுச் சென்ற புகழ், பழிச் சொல் ஆகியவற்றால் அறியப்படும்.

115
கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.

தீதும் நன்றும் வாழ்வில் இயற்கையாய் வாய்க்கப்பட்டவை;  அதனால், உயர்வு தாழ்வு இரண்டிலும் நடுவுநிலை பிறழாமையே, சான்றோர்க்கு அழகாகும்.

116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.

ஒருவர் உள்ளத்தால் நடுவுநிலை தவறி, கேடிழைக்க எண்ணுங்கால், அதுவே, அவரது அழிவிற்கான அறிகுறி என்பதை அறிந்திடல் வேண்டும். 

117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

நடுவுநிலைப் பிறழாது அறநெறியோடு வாழும் ஒருவர், அடையும் வறுமை நிலையை, உலகத்தார் தாழ்வாக எண்ண மாட்டார்கள்.

118
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கூடாமை சான்றோர்க்கு அணி.

முள்ளை சமமாக நிறுத்தி, பொருளின் எடையளவை சமன் செய்யும் தராசு போல், ஒரு பக்கமாய் சார்ந்திடாத நடுவுநிலை எனும் அறம் தவறாமையே சான்றோர்க்கு அழகாகும்.

119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள்கோட்டம் இன்மை பெறின்.

ஒருவர் உள்ளத்தில் நடுவுநிலை கோணாத, நீதியை நிலைநாட்டும் உறுதி அமையப்பெறின், அவரது சொல்லிலும் நீதி பிறழாத நடுவு நிலைமை வாய்க்கப்பெறும்.

120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமப்போல் செயின்.

பிறர் பொருளையும் தம் பொருளாய் மதித்து, நேர்மையோடு வியாபாரம் செய்வாராயின், அதுவே வியாபாரம் செய்வோர்க்கான சிறந்த அறநெறியாகும்.

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *