Powered By Blogger

85. புல்லறிவாண்மை

அதிகாரம் #85 புல்லறிவாண்மை
(சிற்றறிவு கொண்டார் நிலை)
பொருட்பால் | அங்கவியல் குறள்# 841-850

841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு.

அறிவு இல்லாமையே இல்லாமை எல்லாவற்றுள்ளும் கொடுமையானதாகும்; மற்றைய இல்லாமைகளைக் கூட இவ்வுலகத்தார் பெரிதும் பொருட்படுத்துவதில்லை. 

842
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் 
இல்லை பெறுவான் தவம்.

அறிவு இல்லாத ஒருவர் மனம் உவந்து ஒரு பொருளைத் தந்தால், அதன் காரணம், அவரிடமிருந்து அப்பொருளைப் பெறுபவரின் நல்வினையே ஆகும்.

843
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

அறிவில்லாதவர்கள் தமக்குத் தாமே வருத்திக் கொண்டு படும் வேதனை மிகுந்த துன்பமானது, அவர்தம் பகைவர்க்கு செய்வதை விடவும் அரிதாகும்.  

844
வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

அறிவின்மை என்பதன் பொருள் யாதெனில், ஒருவன் தனக்குத் தானே "நானே மிகவும் அறிவார்ந்தவன்!" என்ற மதி மயக்கத்தோடு தன்னையே மதித்துக் கொள்வதான செருக்காகும். 

845
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

அறிவில்லாதவர் தாம் கற்றறிந்திடா நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர் போல போலியாகக் காட்டிக் கொண்டு வாழ்வாராயின், உண்மையாகவே அவர் கற்றறிந்த துறையின்பால் கொண்டுள்ள திறமை மீதும் ஐயத்தை உண்டாக்கும். 

846
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.

தன்னிடத்தே உள்ள குற்றத்தை உணர்ந்து, அதனை நீக்காத போது பிறர் காணக்கூடாத தன் உடலின் பகுதியை மறைத்திட ஆடை அணிவதும் கூட அறிவின்மையே ஆகும். 

847
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

வாழ்வின் நல்வழியைக் காட்டும் அரிய அறிவுரைகளை மனதில் இருத்திக் காத்திடாத அறிவற்றவர்கள், தமக்குத் தாமே பெரும் துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறார்கள். 

848
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் 
போஒம் அளவுமோர் நோய்.

தன் புத்தியும் இல்லாமல், பிறரின் சொல் புத்தியையும் கேட்டுத் தெளியாமல், வாழும் அறிவற்றவனின் உயிரானது அது போகும்  நாள் வரையிலும் அவனைப் பீடித்த ஒரு நோய் ஆகிவிடும்.

849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

அறிவற்ற ஒருவனுக்கு அறிவூட்ட முயலும் அறிவுடையவன், அறிவற்றவனால், அறிவற்றவனாகவே எண்ணப்படுவான்; அறிவற்ற அவனோ, தான் அறிந்த மட்டுமாக உள்ளனவற்றையே அறிவென்று எண்ணுவான். 

850
உலகத்தார் உண்டென்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.

உலகத்து மக்கள் 'உண்டு' என்று சொல்லும் போது, அதை 'இல்லை' என்று மறுத்துச் சொல்லும் அறிவற்றவன், இவ்வுலகில் திரிவதாக நம்பப்படுகின்ற "பேய்" எனக் கருதப்படுகின்றான்.

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *