Powered By Blogger

28.கூடா ஒழுக்கம்

(தவநெறிக்கு புறம்பான ஒழுக்கம்)

271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் 
ஐந்தும் அகத்தே நகும்.

வஞ்சமனதோடு தீயொழுக்கம் கொண்டு ஏமாற்றுவோரைக் கண்டு, அவருள் பொதிந்துள்ள ஐம்பூதங்களே தமக்குள் எள்ளி நகைக்கும்.

272
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.

மனம் உணரக் குற்றங்களைத் தெரிந்தே செய்பவர், வானுயர் தோற்றப் பொலிவுடன் இருந்தாலும், அதனால் என்ன பயன்?

273
வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று.

மனத்தை அடக்கும் வல்லமையற்றவர், வலிந்து துறவறக் கோலம் பூணுவது, புலித்தோலைப் போர்த்திய பசு, பயிரை மேய்வது போன்றது.

274
தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

தவ வேடத்துள் தம்மை மறைத்துக் கொண்டு, அறமில்லாச் செயல்கள் செய்வது, புதரின் பின்னே மறைந்திருந்து வேடன் பறவைகளைப் பிடிப்பதைப் போன்றது.

275
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவும் தரும்.

ஆசைகளைத் துறந்தோம் என்று சொல்லி, தீயொழுக்கம் கொண்டோர்க்கு, எத்தகு செயல்களைச் செய்தோமென மனம் வருந்துவதான துன்பங்கள் வந்து சேரும்.

276
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

மனதால் ஆசைகளைத் துறக்காமல், வெளியே துறந்தவரைப் போல் ஏமாற்றி வாழ்பவரை விட, இவ்வுலகில் கொடியவர் எவரும் இல்லை.

277
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.

புறத்தால் அழகிய குன்றிமணி போல், சிறந்தவரைப் போன்றும், குன்றிமணியின் கறுத்த முனைபோல், அகத்தால் வஞ்சக மனம் கொண்டவரும் இவ்வுலகில் உண்டு.

278
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

புறத்தே தவத்தால் உயர்ந்தவர் போன்றும், மனத்தளவில் மாசு கொண்டவராக, நீருக்குள் தம்மை மறைத்துக் கொள்வாரைப் போன்று இவ்வுலகில் வஞ்சகமாய் வாழ்வோர் பலரும் உளர். 

279
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.

தோற்றத்தில் நேரான அம்பு ஒரு கொலைக் கருவி; வளைந்த யாழ் எனும் இசைக்கருவி இனியது. அதுபோல், மக்களை அவர்தம் தோற்றத்தால் அல்லாமல், செயல்களால் உணர்ந்திடல் வேண்டும்.

280
மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம் 
பழித்தது ஒழித்து விடின்.

உலகத்தார் பழிக்கும் தீய ஒழுக்கங்களை ஒழித்து விட்டால், தலை முடியை சிரைத்தல், சடைமுடி வளர்த்தல் போன்ற புறக்கோலங்கள் தேவை இல்லை.

◀►

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *