Powered By Blogger

15.பிறனில் விழையாமை

(பிறன் மனைவியை விரும்பாத ஒழுக்க நெறி)

141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

உலகில், எல்லா அறம் பொருள் சார்ந்த அறிவு நூல்களை கற்றறிந்த எவரிடத்தும், பிறன் மனைவியை விரும்பும் அற்ப குணம் இருப்பதில்லை.

142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

பிறன் மனைவியை விரும்பி அடையத் துணிவோர், அறமற்ற தீயவழியில் செல்வாரினும் கீழானவர்கள்.

143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்.

பிறன் வீட்டில் நல்லவர் போல் பழகி, அவரது மனைவியிடத்தே முறையற்ற உறவாட நினைப்பவர், உயிர் இருந்தும் இறந்தவர்க்கு ஒப்பாவார்.

144
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

தவறென்று தினையளவும் சிந்தியாமல், பிறன் மனைவியிடத்தே விருப்பம் கொள்பவர், எத்தகையப் பெருமையுடையோராயினும் அவர் மதிப்பு குறையுமேயன்றி வேறு பயனில்லை.

145
எளிதென இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

பிறன் மனைவியை எளிதாக அடையலாம் என்றெண்ணி, முறை தவறுவோர் தம் வாழ்வில், என்றென்றும் அழியாத பழி வந்து நிற்கும்.

146
பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பிறன் மனைவியிடத்தே நெறிதவறுபவரிடம் வந்து சேரும் பகை, பாவம், அச்சம், பழி ஆகிய நான்கு தீங்குகளும் விட்டு நீங்குவதில்லை.

147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

பெண் இன்பத்திற்காக பிறன் மனைவியிடத்தே நாடாதவரே, அறம் காத்து இல்லறம் போற்றுபவர் ஆவார்.

148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

பிறன் மனைவியை நோக்காத பண்பு மிகுந்த நிறைந்த சான்றோர்க்கு, அது சிறந்த அறமும், நிறைந்த ஒழுக்க நெறியுமாகும். 

149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

அச்சம் தரும் பெருங்கடல் சூழ் உலகில் எல்லா நன்மைகளையும் அடையும் தகுதி படைத்தவர் யாரெனின், பிறர்க்குரியவளின் தோளைத் தீண்டாத சான்றோரே ஆவார்.

150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

அறந்தவறிய செயல்களை செய்பவராயினும், அவர் பிறன் மனைவியை நோக்காத பண்பு கொண்டொழுகுவாரெனின், அதுவே அவருக்கு நன்மை பயக்கும்.


அடுத்த அதிகாரம் ➤ 16.பொறையுடைமை

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *