அதிகாரம் #79 நட்பு
(நல்ல நட்பின் இலக்கணம்)
பொருட்பால் | அங்கவியல் | குறள்# 781-790
செயற்கரிய யாவுள நட்பின்? அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு?
நட்பை சம்பாதிப்பதைப் போன்ற சிறந்த செயல் என எவை உள்ளன? நல்வினைகள் செய்தலின் போது, அவற்றைக் காப்பதற்கு நட்பைப் போன்று அரிதான பொருள் வேறு எவை உள்ளன?
782
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.
அறிவார்ந்த பெருமக்களுடனான நட்பானது, பிறையைப் போல் தொடங்கி முழுநிலவென வளரும்; அறிவற்ற சிறியோருடனான நட்பானது முழுநிலவாக உருக்கொண்டு பின்பு தேய்பிறையென குறைந்து மறைந்து போவதாகும்.
783
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
நற்பொருள் கொண்ட சிறந்த நூலைப் படிக்கப் படிக்க இன்பம் தருவதைப் போன்றே, நற்பண்பு மிக்கவருடன் பழகப் பழக அந்நட்பின் வழியே இன்பமும் நன்மையும் தருவதாகும்.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
நட்பானது ஒருவருக்கொருவர் பழகி சிரித்து மகிழ்வதற்கானது மட்டும் அல்ல; நெறிதவறி தீயவழியிற் செல்லும் நட்பை, முன்சென்று இடித்துரைத்து திருத்துவதற்குரியது ஆகும்.
785
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்புஆம் கிழமை தரும்.
ஒருவரோடு ஒருவர் நட்பால் இணைந்திட, நீண்டநாள் தொடர்பும் பழக்கமும் தேவையன்று; இருவரிடத்தேயும் ஒருமித்த மன உணர்வு இருந்தாலே நட்பெனும் தோழமை மலர்ந்திடப் போதுமானது ஆகும்.
786
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
மலர்ச்சியான உணர்வைக் கொட்டி, முகத்தான் மட்டும் வருவது நட்பு அல்ல. உள்ளம் மகிழ அன்பினால் திளைத்த உணர்வு மிக்கதான தோழமைக் கொண்டு பாராட்டப் பெறுவதே நட்பு எனப்படுவதாகும்.
787
அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
அழிவைத் தரவல்ல தீய வழிசெல்லும் நண்பனைத் தடுத்துக் காத்து, நண்பனுக்கு வரும் துன்பத்தைத் தானும் பகிர்ந்து கொண்டு கூடவே இருந்து வாழ்வதே உண்மையான நட்பு ஆகும்.
788
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
அணிந்திருக்கும் உடையானது அவிழ்ந்து நழுவும் போது, தான் அறியாது உடனே அதைப் பிடித்து, தன் மானத்தைக் காத்துக் கொள்ளும் கையைப் போல நண்பனுக்கு துன்பம் வரும்போது, அப்போதே விரைந்து சென்று காப்பது தான் நட்பு ஆகும்.
789
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
நட்பிற்கு சிறந்த அரியணை யாதெனில், எப்போதும் மன வேறுபாடின்றி, தேவைப்படும் போதெல்லாம் இயன்ற வழிகள் யாவிலும் தன் நண்பனைத் தாங்கிப் பிடிக்கும் நிலையே ஆகும்.
790
இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்என்னும் நட்பு.
நான் இவர்க்கு இத்தன்மையர், இவர் எமக்கு இத்தன்மையராவார் என நட்பைக் குறித்து செயற்கையாக புகழ்ந்து பெருமைப்பட சிலாகித்து பேசுவதனால் அந்த நட்பு மதிப்பிழந்து அற்பமானதாகிவிடும்.

