அதிகாரம் #87 பகைமாட்சி
(பகைமையை தமக்கு நன்மை ஆக்கிக் கொளல்)
பொருட்பால் | அங்கவியல் | குறள்# 861-870
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக; ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
தம்மிலும் மிகுந்த வலிமை மிக்கவரிடம், பகை கொண்டு அவரை எதிர்ப்பதை தவிர்க்க வேண்டும்; தம்மை விடவும் மெலியவராயின், அவரிடம் பகை கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ளல் வேண்டும்.
862
அன்பிலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு?
உடன் வாழும் சுற்றத்தாரிடம் அன்பு இல்லாமலும், வலிமை உடையவரது துணையும் இல்லாமலும், தானும் வலிமையற்றவனாக இருந்தால் பகைவரது வலிமையை எவ்வாறு அழித்தல் இயலும்?
863
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
ஒருவன் அச்சம் கொண்டவனாகவும், மடமை எனப்படும் அறிவில்லாத இயல்போடும், பிறரோடு இணங்கி வாழும் இயல்பின்றியும், இரக்க சிந்தை இல்லாதவனாகவும் இருப்பின் அவன் பகைவரால் எளிதில் தோற்கடிக்கப்படுவான்.
864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
தன் சினத்தை நீக்க இயலாதவனாகவும், தன் மனத்தை கட்டுப்படுத்தும் தன்மையற்றவனாகவும் இருப்பவனை, எக்காலத்தும் எவ்விடத்திலும் எவராலும் வெல்வது என்பது எளிதாகும்.
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.
நீதி நூல்கள் காட்டும் நல்வழியை நாடாமலும், பொருத்தமானதைச் செய்யாமலும், பழிக்கும் அஞ்சாதவனாக நற்பண்பு இல்லாத ஒருவனை அவனது பகைவர்கள் வெல்வது என்பது இனிதாகும்.
காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
நல்லவை, அல்லவை, என எதைப் பற்றியும் சிந்திக்காத சினம் கொண்டவனாகவும், பெரும் பெண்ணாசையும் உடையவனாகவும் இருந்தால், அவனுடனான பகைமையை பிறர் விரும்பி எதிர் கொள்வர்.
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
தன்னுடன் இருந்து கொண்டே தனக்கு ஒவ்வாத செயல்களைச் செய்து கொண்டிருப்பவனை, சில பொருளை இழந்தாகினும் பகைவனாக்கிக் கொள்ளல் வேண்டும்.
குணன்இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து.
நற்குணங்கள் இல்லாமலும் குற்றங்கள் பலவும் புரிபவராக இருந்தால், அவரது பக்கத் துணைகள் எல்லோரையும் இழந்து, அதனால் பகைவர்களால் எளிதில் வீழ்த்தப்படலாவர்.
செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
நீதியை அறிந்திடும் அறிவின்றி எதற்கும் அஞ்சுகின்ற இயல்புடைய கோழையான ஒருவரைப் பகைவராகப் பெற்றால், அவரை எதிர்கொண்டு பகை கொள்வோர்க்கு வெற்றியாகிய நன்மை நீங்காது நிலைத்திருக்கும்.
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்,
ஒல்லானை ஒல்லாது ஒளி.
நல்ல நூல்களைக் கற்றறியாத அறிவற்றவனிடத்தே, பகை கொண்டு போர் செய்வதால், கிடைப்பது சிறுபொருள் தான் எனினும், அதைக் கூட செய்தற்கு துணிவு இல்லாதவனிடத்தே, எக்காலத்தும் வெற்றிப் புகழ் வாராது.

