743
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
பகைவர்க்கு எட்டாத உயரம், பகைவர்களை எதிர்கொண்டு செயலாற்ற ஏதுவான அகலம், யாராலும் தகர்க்க இயலாத உறுதித்தன்மை ஆகிய அமைப்புகளை உடையதே செயற்கை அரண் என நூல்கள் கூறும்.
744
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.
பாதுகாக்கப்பட வேண்டிய இடம் சிறியதாக அமைந்து, உட்பகுதி பரந்த இடமாகவும், வெல்லும் பொருட்டு உள்நுழைந்து முற்றுகையிட்ட பகைவரின் மன ஊக்கத்தை அழிக்கவல்லதாகவும் இருப்பதே அரண் ஆகும்.
745
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்குஎளிதாம் நீரது அரண்.
பகைவர் முற்றுகையிட்டு கைப்பற்றுதற்கு அரிதான நிலையில், உள்ளிருந்து போரிடும் படையணிக்குத் தேவையான உணவைக் கொண்டிருப்பதும், தொடர்ந்து வீரர்கள் போரிடுவதற்கு இலகுவான தன்மையதாய் அமைவதுமே அரண் எனப்படுவதாகும்.
746
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
போருக்கான எல்லாப் பொருட்களையும் உடையதாகவும், வெளியே முற்றுகையிட்டுள்ள எதிரிகளை வென்று வீழ்த்திட, உள்ளிருந்து தீரத்தோடு போரிடவல்ல வீரர்களை கொண்டதாகவும் இருப்பது அரண் எனப்படும்.
747
முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண்.
முற்றுகையிட்டோ முற்றுகையிடாமலோ போரிட்டும், சூழ்ச்சிகள் வஞ்சனைகள் பலவும் செய்த பின்னரும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதாய் திகழ்வதே அரண் எனப்படுவதாகும்.
748
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
போரில் முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு இயங்கும் பெரும்படையை, உள்ளிருந்தவாறே எதிர்கொண்டு அவர்களை வென்று காத்துக் கொள்ளும் தன்மையதைக் கொண்டது அரண் எனப்படுவதாகும்.
749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறுஎய்தி மாண்டது அரண்.
போர்முனையில் பகைவர் தோற்று வீழும்படியாக, உள்ளிருந்தே போர்த்திறம் கொண்டு தாக்குதல் நடத்திட ஏதுவான சிறப்புமிகும் தன்மை கொண்டு விளங்குவதே அரண் எனப்படுவதாகும்.
750
எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
எத்தகு சிறப்புகளும் பெருமைகளும் கொண்ட அரண் அமையப் பெற்றிருந்தாலும், ஆங்கே போரிடும் வீரர்களிடத்தே பகைவர்களை வெல்வதற்கான செயல்திறம் இல்லையெனில், ஒரு பயனும் இல்லை.
◀| 74. நாடு
இந்த அதிகாரத்தின் YouTube காணொலி: