51
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
இல்லறத்திற்கான நற்பண்புகளோடு, தன் கணவனின், பொருள் வளத்தைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு இல்லத்தை வழி நடத்துகிறவளே சிறந்த வாழ்க்கைத் துணையாவாள்.
52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.
மனைவியிடம் இல்லறத்திற்கான நற்பண்புகள் இல்லாவிடில், அவ்வாழ்க்கை, எத்தகைய சிறப்புடையதாகினும் அதனால் ஒரு பயனுமில்லை.
53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?
நற்பண்புகள் உடைய மனைவியால் வாழ்க்கையில் ஒருவனுக்கு இல்லாதவை என்ன? அவ்வாறு, நற்பண்புகள் இல்லாத மனைவியால் அவ்வாழ்க்கையில் இருப்பவை தான் என்னவோ?
54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெரின்?
பெண் என்பவள் கற்புநெறி எனும் திடமான உறுதிப் பண்பைக் கொண்டவளாக இருந்தால், அதைவிட மேலான பெருமை வேறு என்ன உள்ளது?
55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
கடவுளைக் கூடத் தொழாமல், தன் கணவனையே கடவுளென நினைந்து துயில் எழும் பெண்ணானவள், 'பெய்' என்று சொன்னால், மழையும் பெய்யும்.
56
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
கற்பு நெறி பிறழாது, தன்னைக் காத்துக் கொண்டு, தன் கணவனையும் பாதுகாத்து, தன் இல்லத்தின் புகழையும் காப்பதில், உறுதி குலையாமல் வாழ்பவளே பெண்.
57
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
பெண்களை சிறை போன்று அடிமை செய்து காத்தல் என்பது பயனற்றது; அவர்கள், தம் கற்பு நெறியாலும், சிறந்த பண்பினாலும், தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் காவலே தலை சிறந்தது.
58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
கணவனைப் போற்றி தம் கடமையைச் செய்யும் பெண்ணானவள், தான் வாழும் புத்துலகில் பெருஞ்சிறப்பை அடைவர்.
59
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
இல்லத்தின் புகழைக் காக்க வல்ல, மனைவியை அடையப்பெறாதவர்க்கு, தம்மை இகழும் பகைவர் முன்பாக, காளை போல், பெருமிதமாய் நடை போடும் பெருமை, வாய்ப்பதில்லை.
60
மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.
சிறந்த பண்புகளை உடைய, மனைவியே இல்லத்தின் மங்கலம் ஆகும்; அதனினும், நல்ல மக்களைப் பெறுதல் அச்சிறப்பினும் அழகு சேர்க்கும்.

