Powered By Blogger

27. தவம்

(துன்பம் பொறுத்து, மனம் அடக்கி, பிற உயிர்க்கு ஊறு தராத  வாழ்வு முறைமை)

அதிகாரம்#27 | அறம் | துறவறவியல் | குறள்கள்#261-270

261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.

தன் வலி, துன்பம் பொறுத்துக் கொண்டு, பிற உயிர்க்குத் துன்பம் இழைக்காது வாழும் முறைமையே தவம் என்பதன் வடிவாகும்.

262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை 
அஃதிலார் மேற்கொள் வது.

மன உறுதியும் கட்டுப்பாடும்  உரியவர்க்கே தவம் எனும் அறம் வாய்க்கலாகும். அவை அல்லாது தவத்தை மேற்கொள்ளல் வீண்.

263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்?

துறவியர்க்கு உதவி செய்ய வேண்டுமே என்ற காரணங்காட்டி, மற்றையோர், தவ ஒழுக்க நெறியைத் தழுவிட மறந்திடல் கூடாது. 

264
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

தீயவரை வீழ்த்துதலும், நண்பர்களைக் காத்தலும் எண்ணிய கணத்தில், தம் தவநெறியின் வலிமையால் உண்டாகப் பெறும்.

265
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

விரும்பிய வண்ணம் பயன்களை அடைந்திட இயலும் என்பதால், இவ்வுலகில் செய்யத்தக்கதான தவத்தினை  முயன்று செய்யப்படும்.  

266
தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவஞ்செய்வார் ஆசையுள் பட்டு.

நெறிதவறாத அறங்களோடு தவம் செய்பவரே, தம் கடமையை செய்பவர் ஆவார்; மற்றவர்கள், ஆசையில் அகப்பட்டு  வீணான செயல்களை செய்பவர் ஆவார்.

267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

பொன்னை தீயில் புடமிட்டுச் சுடும் போது, அது ஒளிர்வதைப் போல, துன்பங்கள் சூழ்ந்து வருத்த வருத்தத் தவம் கொண்டோர்க்கு ஞானம் ஒளிரும்.

268
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

தனது உயிர், தான் எனும் பற்றில்லாது, தவவலிமையோடு வாழ்வாரை உயிர்கள் யாவும் தொழுது போற்றும்.

269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

மன உறுதியும் ஊக்கமும் கொண்ட தவம் எனும் வலிமையின் பயனால், மரணத்தையும் வெல்லும் ஆற்றல் கைக் கூடும்.

270
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் 
சிலர்பலர் நோலா தவர்.

ஆற்றல் இல்லாது பலரும் இருந்திடக் காரணம் யாதெனின், தவத்தின் மனஉறுதி கொண்டவராகச் சிலரும் உறுதியற்றவர் பலருமாக இருப்பதுவே ஆகும்.

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *