Powered By Blogger

84. பேதைமை

அதிகாரம் #84 பேதைமை
(அறிய வேண்டுவன ஏதும் அறியாத நிலை)
பொருட்பால் | அங்கவியல் குறள்# 831-840
831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.

பேதைமை எனும் அறியாமை என்பது யாதெனில், ஒருவர் தமக்கு தரப்படுகின்ற தீமைகளைப் பெற்றுக் கொண்டு, தமக்கு வரவேண்டிய நன்மைகளை விட்டுவிடுவதாகும். 

832
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்.

ஒருவரது அறியாமையுள் எல்லாம் பெரும் அறியாமை என்பது யாதெனில், தமக்கு நன்மை தராதவற்றுள் விருப்பம் கொண்டு அதை நாடிச் செல்வதே ஆகும். 

833
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

தீமைகளுக்காக வெட்கப்படாமை, நல்லவற்றை விரும்பி நாடாமை, அன்பை வெளிக் கொணராமை, பேணிக் காக்க வேண்டியனவற்றைப் பாதுகாக்காமை ஆகியன பேதையரின் இயல்பான செயல்களாகும்.

834
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான்அடங்காப்
பேதையின் பேதையார் இல்.

நூல்களைக் கற்றும், கற்றவற்றை உணர்ந்தும், உணர்ந்ததைப் பிறர்க்கு உணர்த்தியும் வாழ்பவர் தாம் மட்டும் அந்த நெறிகளின்படி நடவாதிருப்பின் அவர்களை விடவும் அறிவற்ற பேதையர் எவரும் இல்லை. 

835
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.

பேதையானவன் தனது ஒரு பிறவியிலேயே, அடுத்து வரப்போகின்ற எல்லாப் பிறவிகளிலும் அனுபவிக்க வேண்டிய எல்லாத் துன்பங்களையும் அனுபவிக்கும் இயல்பினன் ஆவான். 

836
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

ஒழுக்க நெறிமுறைகளை அறிந்திராத பேதையானவன், தான் மேற்கொள்ளும் செயலை நிறைவாக முடித்திட இயலா நிலைக்கு ஆளாகி அந்தச் செயலும் கெட்டு அவனும் கெடுவான்.

837
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

அறிவற்ற பேதை ஒருவரிடத்தே குவியும் பெரும் செல்வத்தால், அயலார் பெருநன்மை அடைவர்; அவருடைய பாசமிக்க சுற்றத்தாரோ பசியோடு துன்பத்தில் உழல்வர். 

838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.

அறிவற்ற பேதையொருவனுக்குச் சொந்தமாக ஒரு பொருள் கிடைத்து விட்டால், பித்துப் பிடித்தவன் கள்ளைக் குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பதைப் போன்ற கதையாகி விடும். 

839
பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதுஒன்று இல்.

அறிவற்ற பேதையரிடத்தே நட்பு கொள்வதானது, மிகவும் இனிமையானதாகும்; ஏனெனில், அவருடனான நட்பை விலக்கி  பிரியும் நிலை வந்தால், அதற்காக அவர் துன்புற்று வருந்துவதில்லை. 

840
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.

சான்றோர் குழுமியுள்ள அவையுள், ஒரு பேதை நுழைவது என்பதானது, அசுத்தத்தை மிதித்த கால்களைத் தூய்மைப்படுத்தாமல் படுக்கையில் வைப்பதைப் போன்றதாகும். 

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *