81
இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
இல்லத்தைப் போற்றிப் பாதுகாத்து வாழ்வது, தம் விருந்தினரை உபசரித்து, அவர்களுக்கு உதவி செய்தற் பொருட்டே ஆகும்.
82
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
இல்லம் வந்த விருந்தினரைப் புறந்தள்ளி விட்டு, தான் மட்டும் உண்ணும் சாகா மருந்தான அமிழ்தேயாயினும், அது விரும்பத் தக்கதல்ல.
83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
நாளும், இல்லந்தேடி வரும் விருந்தினரைப் போற்றி உபசரித்து, மகிழ்வோரது வாழ்க்கை, ஒருபோதும் கெடுவதில்லை.
84
அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
இன்முகத்தோடு விருந்தினரைக் கொண்டாடுகிறவர் இல்லத்தில், செல்வமெனும் திருமகள் உளம் மகிழ்ந்து நிலைத்திருப்பாள்.
85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்?
விருந்தினருக்கு முதலில் விருந்தோம்பி, பின் மிஞ்சிய உணவை உண்பவரின் நிலத்தில், விதையும் விதைத்திடல் வேண்டுமோ?
86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
வந்த விருந்தினரை விருந்தோம்பி வழியனுப்பிவிட்டு, வரவிருக்கும் விருந்தினரை, ஆவலாய் எதிர்நோக்குபவர் வானுலகத்தவரின் சிறந்த விருந்தினர் ஆவான்.
87
இனைத்துணைத்து என்பதொன்று இல்லை; விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
விருந்தோம்புதல் எனும் வேள்வியால் விளையும் பயன், இதுவென்று அளவிடுதற்கில்லை; அது விருந்தினர் தகுதியின் அளவைப் பொருத்தது.
88
பரிந்தோம்பி பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
ஒருவர் தன் செல்வத்தை வேள்வியின் பயனைத் தரக்கூடிய விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் சேர்த்து வைத்து, பின்னர், அதை இழக்கும் நிலை வரும்போது, அதற்காக மிகவும் வருந்துவார்.
89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
செல்வமிருந்தும் வறுமை நிலைக்கு ஒப்பான விருந்தினரைப் போற்றா அறியாமைத் தன்மையானது, அறிவற்றவர்களிடம் காணப்பெறும்.
90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
முகர்ந்த உடனே அனிச்ச மலர் வாடிவிடும்; நம் முகம் மாறுபட்டு விருந்தினரைப் பார்க்குங்கால், அவர் முகமும் வாடிப் போகும்.

