Powered By Blogger

60. ஊக்கம் உடைமை

(செயலாற்றலில் சோர்வில்லா எழுச்சி கொளல்)
அதிகாரம்: 60. ஊக்கம் உடைமைபால் வகை: 2. பொருள்
இயல்: 5. அரசியல்


591
உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று?

உள்ளத்துள் ஊக்கம் உடையவரே எல்லாம் உடையவர் எனப்படுபவர்; உள்ளத்துள் ஊக்கம் இல்லாமல் வேறு எதைப் பெற்றவராயினும், அவர் எல்லாம் உடையவர் ஆக மாட்டார். 

592
உள்ளம் உடைமை உடைமை;
 பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

மனஉறுதியாகிய ஊக்கம் ஒன்றே, ஒருவர்க்கு, நிலையான உடைமை என்பதாகும். செல்வமெனும், பொருளுடைமை கூட நிலைக்காது நீங்கிவிடத் தக்கதாகும். 

593
ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துஉடை யார்.

மன ஊக்கத்தை உடையவர், பெரும் செல்வத்தை இழந்து நின்றாலும், அப்போதும், அதற்காக ஊக்கத்தை இழந்து, கலங்கி நிற்க மாட்டார்.

594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா னு
ழை.

மனம் தளராத ஊக்கம் உடையவரிடத்தே, செல்வமும் உயர்வும், அவர்தம் முகவரி தேடி, தாமாகச் சென்று சேரும். 

595
வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.

நீரின் அளவினதையொத்தே, நீர்ப்பூக்களின் காம்பின் நீளம் அமையும்; அது போல, மனிதனின் உள்ளத்தில், நிரம்பி நிற்கும் ஊக்கத்தின் அளவினதை ஒத்தே, அவனது வாழ்க்கை உயர்வும் அமையும். 

596
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்; மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

உள்ளத்துள் எண்ணுகின்ற யாவற்றையும், உயர்வு மிக்கதாக எண்ணுதல் வேண்டும்; ஒருவேளை, அவ்வுயர்வு கை கூடாது போயினும், உயர்ந்ததான எண்ணங்களை ஒருபோதும் கைவிடுதல் கூடா.

597
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின் 
பட்டுப்பாடு ஊன்றும் களிறு.

உடல் முழுக்க அம்புகளால் தைக்கப்பெற்ற யானை, தம் ஊக்கத்தால், தன் உறுதியை தளரவிடாது; அதுபோல, ஊக்கம் மிகுத்த மனஉறுதி கொண்டவர், அழிவே வந்தாலும், அதற்காக தளராமல், தம் பெருமையை நிலைநிறுத்துவர்.

598
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.

உள்ளத்து ஊக்கம் இல்லாதவர்கள், இவ்வுலகில், தாமே வள்ளல் என, தமக்குத் தாமே பெருமைப்பட்டுக் கொள்ளும், மனமகிழ்ச்சியை ஒருபோதும் அடைய மாட்டார். 

599
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

யானை, உருவத்தால், பெரியதும், கூரிய தந்தங்களையுடையதுமாக இருந்தாலும், உருவத்தில் சிறியதும், ஊக்கம் மிக்கதுமான, புலியின் தாக்குதலுக்கு, அது அஞ்சும்.

600
உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃதில்லார்
மரம்மக்கள் ஆதலே வேறு.

ஒருவர்க்கு ஊக்கம் மிகுத்த மனவுறுதியே, திண்ணிய அறிவாகும். அது இல்லையெனின், அவர், வடிவத்தால் மனிதர் ஆயினும், மனத்தளவில் மரத்திற்கு ஒப்பானவர் ஆவார். 

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *