Powered By Blogger

41. கல்லாமை

(கல்வி கற்காமை எனும் இழிநிலை)

அதிகாரம்.41 | பொருள் | அரசியல் குறள்கள்#401-410

401
அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பிய
நூல் இன்றிக் கோட்டி கொளல்.


நிறைவான அறிவாற்றல் இல்லாது அவையில் பேசுதல் என்பது, ஆடுவதற்கு அரங்கினை அமைத்துக் கொள்ளாமல், வட்டுக்காய் உருட்டி, தாயம் விளையாடுவதைப் போன்றது.

402
கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்றற்று.

கல்வி அறிவு இல்லாத ஒருவர், கற்றறிந்தவர் கூடியுள்ள அவைதனில் பேச விரும்புவது என்பது, இரு மார்பும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்புதல் போன்றது.

403
கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
சொல்லாது இருக்கப் பெறின்.


கல்வியறிவு மிக்க சான்றோர் அவைதனில், ஒருவர் பேசாமல் அவையடக்கம் காப்பாராயின், அவர் கல்லாதவரே எனினும்  மிகவும் நல்லவர் என்றே கருதப்படுவார். 

404
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும்
கொள்ளார் அறிவு உடையார்.

கற்றோர் சபைதனில், கல்லாதவர் ஒரு சமயம் அறிவுமிக்கவராய் தெரிந்தாலும், கல்வி அறிவுமிக்க சான்றோர்கள், வரை கல்வியிற் சிறந்தவர் என, ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
 
405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

கல்வி அறிவற்ற ஒருவர், தான் கற்றவரென்று போலியாய் வேடமிட்டு தற்பெருமை கொள்வாராயின், அவர் கற்றவர் முன்பாக உரையாடும்போதே, அவரது பெருமை குலைந்து போகும்.

406
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர் அனையர் கல்லாதவர்.

கல்லாதவரை, உயிருடன் உள்ளவர் என்ற அளவில்  மாத்திரமே கருதப்படுவாரே அன்றி, அவர் விளைச்சல் இல்லாத, யார்க்கும் பயனில்லாத களர் நிலத்திற்கு ஒப்பானவர் ஆவார். 

407
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

அறிவு நுட்பம் பொருந்திய சிறந்த நூல்களை, ஆராய்ந்து தெளியும் அறிவு இல்லாதவனின் அழகும், உடற்கட்டும், மண்ணைக் கொண்டு புனையப்பெற்ற பொம்மையைப் போன்றதாகும்.

408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.


    கல்வி அறிவற்றவரிடம் குவிந்துள்ள செல்வமானது, கற்றறிவு உள்ள நல்லவர்களிடத்தே உள்ள வறுமைத் துயரை விடவும் துன்பம் மிக்கதாகும்.

409
மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார், கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

கல்லாத ஒருவர் உயர்குலத்திற் பிறந்தவர் ஆயினும், அவர் கீழ்க்குலத்தினருள் கற்றவரையொத்த பெருமையை அடைய மாட்டார்; ஆகவே, கற்றவர் என்ற பெருமை, அவர் பிறப்பினாலும் உயர்ந்தவர் என்றே விளிக்கப்படும்.

410
விலங்கொடு மக்கள்அனையர், இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

விலங்கோடு, மக்களுக்கு எவ்வளவு வேற்றுமைகள் உண்டோ, அந்தளவிற்கு, சிறந்த அறிவுமிகும் நூல்களைக் கற்றவர்க்கும், கல்லாதவருக்குமான வேற்றுமைகளும் உண்டு.

◀40.கல்வி
►42.கேள்வி

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *