Powered By Blogger

8.அன்புடைமை

(பிறரிடத்தே அன்புடையவராய் இருத்தல்)

அதிகாரம் 8. அன்புடைமை | அறம் | இல்லறம் | குறள்கள் 71-80

71
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.

உள்ளம் நிறைந்த அன்பை தாழிட்டு அடைத்து வைத்திடல் கூடுமோ? தம் அன்புக்குரியவரின் துன்பத்தைக் கண்டு, வழியும் கண்ணீர் துளியே, அவர்தம் அன்பை வெளிக்காட்டி விடும்.

72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பு இல்லாதவர்கள், எல்லாவற்றையும் தமக்கே உரியதாய் ஆக்கிக் கொள்வர்; அன்புடையவர்களோ, தம் உடலாலும்  பிறர்க்கென உடையதாக்கி வாழ்வர்.

73
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

அரிதான உயிரும், உடலும் இணைந்தது போன்றதே அன்போடு இசைந்தது வாழ்க்கை.

74
அன்புஈனும் ஆர்வம் உடைமை; அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.

அன்பு மிகுத்தவரிடத்தே, பழகும் ஆர்வத்தை உண்டாக்கும்; அது அனைவரிடத்தும், நட்பு பாராட்டும் அளப்பரிய சிறப்பையும் தரும்.

75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

இவ்வுலகில், இன்பமாக வாழ்வோரின் சிறப்பின் காரணம், அவர் பிறரிடத்தே அன்பு செய்து வாழும் வாழ்க்கையின் பயனே ஆகும்.

76
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.

அறியாதவர்களே, அன்பு என்பது அறம் செய்வதற்கு மட்டுமேயானது என்பவர்; மாறாக, வீரத்திற்கும் அன்பே துணையாகும்.

77
என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம்.

எலும்பற்ற புழு போன்ற உடலை வருத்தும் வெயில் போல, அன்பு இல்லாதவர் உயிரை அறம், வருத்தி விடும்.

78
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.

உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழும் வாழ்க்கையானது, பாலை நிலத்தில், காய்ந்த மரமானது தளிர்த்ததற்கு ஒப்பானதாகும்.

79
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு?

ஒருவருக்கு அன்பு எனும் அக உறுப்பு இல்லாமல், அவர்தம் உடலின் புற உறுப்புகளால் மட்டும் என்ன பயன்?

80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பின் வழி இயங்குவதே உயிர் கொண்ட உடல் ஆகும்; அன்பிலாதவர்க்கு, எலும்பை தோல் கொண்டு போர்த்திய வெற்றுடலாகும்.

அடுத்த அதிகாரம்: 9. விருந்தோம்பல்

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *