Powered By Blogger

31.வெகுளாமை

(சினம் கொள்ளாமை)

அதிகாரம்#31 | அறம் 
துறவறவியல் குறள்கள்#301-310

301
செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக் 
காக்கின்என் காவாக்கால் என்?

தன்னை விடவும் மெலியோரிடத்தே சினம் கொள்ளாமல் அடக்குபவனே சினம் காப்பவன்; தன் சினம் பலிக்காத வலியோரிடத்தே சினத்தைக் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?

302
செல்லா இடத்துச் சினம்தீது; செல்இடத்தும் 
இல்அதனின் தீய பிற.

தன்னினும் வலியவரிடத்தே கொள்ளும் சினம் தீமை தரும்; தன்னினும் மெலியோரிடம் கொள்ளும் சினத்தை விடவும் தீங்கானது வேறொன்றில்லை.

303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய 
பிறத்தல் அதனான் வரும்.

யாரிடத்தும் சினம் கொள்ளாமல் அதை மறத்தல் நன்று; இல்லாவிடில், அச் சினத்தினாலேயே தீமைகள் பலவும் உண்டாகப் பெறும்.

304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
பகையும் உளவோ பிற?

முகமலர்ச்சியையும் மனமகிழ்ச்சியையும் ஒருங்கேக் கொல்லக் கூடியதான, சினத்தை விடவும் ஒருவருக்கு வேறு பகை ஒன்று உளதோ?

305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

ஒருவர், தன்னைத் தானே காத்துக் கொள்ள வேண்டின், சினம் வராது காத்துக் கொள்ளுதல் வேண்டும்; இல்லை எனில், அவரது சினமே அவரை அழித்து விடும். 

306
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி, இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.

சினம் கொள்பவரையே அழிக்கும் தீயாகிய சினமானது, அவரை கலனாகப் பாதுகாக்கும் அவரது இனத்தையும் சேர்த்தே அழித்து விடும்.

307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையாது அற்று.

நிலத்தை அறைபவன், தன் கை வலியிலிருந்து தப்பித்திட இயலாததைப் போல, சினத்தைக் குணமாகக் கொண்டவனும், அதனால் வரும் கேட்டினின்று பிழைக்க இயலாது. 

308
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

எரியும் தீயினைக் கொண்டு தம் உடலில் தோய்ப்பதையொத்தத் துன்பங்களை நமக்கு செய்பவரிடத்தேயும், கூடுமாயின், சினம் கொள்ளாமை நன்மையையேத் தரும்.

309
உள்ளியது எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

ஒருவர் உள்ளத்தளவில் சினத்தை எண்ணாதவராக இருப்பாராயின்,  அவர் எண்ணிய நன்மைகள் யாவற்றையும் ஒருங்கே அடையப் பெறுவர்.

310
இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத் 
துறந்தார் துறந்தார் துணை.

அளவுகடந்த சினம் கொள்பவர் இறந்தவருக்கு ஒப்பானவராவார்; சினத்தை முற்றாகக் கைவிட்டவர், எல்லாப் பொருளும் துறந்த துறவியர்க்கு இணையானவராவார். 

◀| அதிகாரம் 30.வாய்மை |
| அதிகாரம் 32.இன்னா செய்யாமை |►

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *