Powered By Blogger

46.சிற்றினம் சேராமை

(சிறுமை குணம் கொண்டாரோடு சேராமை)

பொருட்பால் | அரசியல் | அதிகாரம் 46

451
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் 
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

பெரியோர்கள், சிறுமை குணம் கொண்ட சிற்றினத்தாரோடு, சேர்ந்திட அஞ்சுவர்; சிற்றினத்தாரோ, அவர்களுள் சுற்றத்தாரைப் போல், சேர்ந்தே இருப்பர். 

452
நிலத்துஇயல்பால் நீர்திரிந் தற்றாகும்; மாந்தர்க்கு
இனத்துஇயல்பது ஆகும் அறிவு.

நீரானது, தான் சேர்ந்த நிலத்தின் தன்மையொத்த இயல்பினதாகிவிடும்; அதைப் போலவே, மனிதர் தம் அறிவும், அவர் சேர்ந்த இனத்தவரையொத்த இயல்பினதாகி விடும்.

453
மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்.

மனிதர்க்கான இயற்கை அறிவு, அவரவர் மனத்தால் உண்டாகப்பெறும்; ஆயினும், ஒருவன் எத்தகையத் தன்மையவன் என்பதன் பெரியோரது சொல், அவன் சார்ந்த இனத்தின் தன்மையால் அமையும்.

454
மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉள தாகும் அறிவு.

ஒருவரின் அறிவானது, அவரது மனத்தின் தன்மையது எனத் தோன்றினாலும், உண்மையில், அவர் சார்ந்த இனத்தாருடனான தொடர்பின் தன்மையால் அமைவதாகும்.

455
மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும்.

ஒருவரது மனத்தின் தூய்மை, செய்யப்பெறும்  செயலின் தூய்மை ஆகிய இரண்டும், அவர் சார்ந்த இனத்தின் தூய்மையால் வருவதாகும். 

456
மனம்தூயார்க்கு எச்சம்நன் றாகும்; இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை.

மனத்தூய்மை கொண்ட நல்லவர்க்கு, அவர் விட்டுச் செல்பவையே நல்லனவாகும்; தூய இனத்தாரை சார்ந்த நல்லவர்க்கோ, நன்றென அமையாத செயல் என்று ஏதுமில்லை.

457
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

மனநலமானது, நிலைப்பெற்று வாழும் உயிர்க்கெல்லாம் ஆக்கம் தருவதாகும்; அதுபோல, இனத்தின் நலமோ, யாவர்க்கும், எல்லாப் புகழும் தரும். 

458
மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து.

நல்ல மனநலம் உடையவராயினும், சான்றோர்க்கு, அவர் சார்ந்த இனநலம் மிகுத்ததாய் அமையுமாயின், அது அவர்க்கு பாதுகாப்பு மிகுத்த வலிமையுடையதாகும்.

459
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து.

ஒருவர்க்கு மனத்தின் நன்மையால், அவர்க்கு மறுமைப் பயன் நன்றாம் அமையும்; அவர்தம், இனத்தினரது நன்மைப் பயனால், அதுவும் வலிமையுடையதாய் அமையும்.

460
நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

ஒருவர்க்கு, நல்ல இனத்தை விடவும், சிறந்ததொரு துணை வேறில்லை; தீய இனத்தை விடவும், பெருந்துன்பம்  தரக் கூடியது வேறில்லை. 

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *