அதிகாரம் #89 உட்பகை
(புறத்தால் நட்பும் அகத்தால் பகையும் கொள்ளும் தீங்குணம்)
பொருட்பால் | அங்கவியல் | குறள்# 881-890
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
நிழலும் நீரும் இனியவை எனினும், கேடுவிளைவிக்குமானால் அவை தீயனவாகும்; அதுபோல், உற்றார் உறவினர் புறத்தே நெருக்கமாக உறவாடினாலும், அகத்தே உட்பகை கொண்டிருந்தால், அது, தீமை பயப்பதுவே ஆகும்.
வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
ஒரு வாளைப் போல் வெளிப்படையாக தெரிகின்ற பகைவருக்காக அஞ்சுதல் வேண்டாம்; ஆனால், புறத்தே உறவாடுவது போலவும் அகத்தே பகைமை உணர்வு கொண்டும் கேடு நினைப்பவரிடத்தே அஞ்சுதல் வேண்டும்.
883
உட்பகை அஞ்சிதற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
உட்பகைக்கு அஞ்சி நம்மைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு காக்காவிடில், நாம் தளர்வுறும் தருணம் குயவர் மண்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகையே நம்மை உறுதியாக அழித்து விடும்.
மனம்மாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.
புறத்தே நட்புணர்வும் அகத்தே பகையுணர்வுமாக ஒருவனுக்கு உண்டாகப் பெறுமானால், அது அவரது நட்பு மற்றும் சுற்றத்தார்க்கு தீமை செய்யும்படியானக் குற்றங்களை உருவாக்கி, துன்பம் பலவும் தந்து விடும்.
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
ஒருவர்க்கு அவர்தம் உற்றார் உறவினரிடம் உட்பகை ஏற்படுமாயின், அவர் இறக்கும் வகையிலான குற்றங்களை உருவாக்கி துன்பம் பலவும் தந்து விடும்.
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
உற்றவராய் கூடவே ஒன்றி இருப்பவர்களிடையே, உட்பகை ஏற்படுமாயின் அதனால் வரும் அழிவைத் தடுத்து தம்மைக் காத்துக் கொள்வதானது எக்காலத்தும் அரிதாகும்.
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
செப்பு என்பதான ஓர் பாத்திரம், அதன் மூடியுடன் பொருந்துவதைப் போன்று, உட்பகை கொண்டவர்கள், புற அளவில் பிறரோடு கூடியிருப்பதாகத் தோன்றினாலும், அகத்தளவில் கூடியிருக்க மாட்டார்கள்.
அரம்பொருத பொன் போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.
அரம் கொண்டு தேய்க்கப்படும் இரும்பின் வலிவும் உருவும், சில காலத்திற்குள் சிதைந்து போவதைப் போல், உட்பகை கொண்டுள்ள குடியும் நாளடைவில் நலிந்து போய் தம் பலம் இழந்து போய் விடும்.
889
எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு.
எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு.
உட்பகையானது ஒரு எள்ளின் பிளவைப் போல், அளவிற் சிறியனதாகவே தோன்றினாலும், ஒரு குடியையே அழித்திடவல்லதான கேடு உடையதாம் உட்பகை.
890
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
தம்முள் உள்ளத்தளவில் உடன்பட இயலாதவர்கள், ஒன்றாக கூடி வாழும் வாழ்க்கையானது ஒரு குடிசைக்குள் பாம்புடன் சேர்ந்து வாழ்வதைப் போன்றதாகும்.

