Powered By Blogger

64. அமைச்சு

அமைச்சரின் திறம் ஆற்றல் பண்பியல்கள்

2. பொருட்பால் | 2.2. அங்கவியல் | அதிகாரம்: 64

631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் 
அருவினையும் மாண்டது அமைச்சு.

செயலுக்கான கருவி, செயலை செய்ய ஏதுவான காலம், செயல்படுத்தும் வழிமுறை, ஆற்ற உள்ள அரிய செயல் ஆகிய யாவும் சிறப்படைய எண்ணும் வல்லமை கொண்டவரே அமைச்சர் ஆவார். 

632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.


அச்சமின்றி செயலாற்றல், குடிமக்களைக் காத்தல், நீதி நூல்களை கற்றல், கற்றாறிடத்தே கேட்டறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தையும் திருத்தமாகத் தன்னகத்தேக் கொண்டவரே அமைச்சர்.

633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் 
பொருத்தலும் வல்லது அமைச்சு.

பகைவரின் துணையோரைப் பிரித்தல், உடன் இருப்போரை இன்சொல், கொடை நல்கிக் காத்தல், முன்னம் பிரிந்த நல்லோரை மீண்டும் தம்மொடு சேர்த்தல், ஆகியவற்றுள்  எல்லாம் வல்லவரே அமைச்சர்.

634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் 
சொல்லலும் வல்லது அமைச்சு.

செயலைப் பற்றி நன்கு ஆராய்ந்து தெளிந்தறிதல், வாய்ப்பு வரும்போது வல்லமையோடு செயலாற்றுதல், சொல்வனவற்றைத் துணிந்து சொல்லுதல் ஆகியவற்றுள் வல்லமை பெற்றவரே அமைச்சர். 

635
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

அறநெறி யாவும் அறிந்தும், அறிவிற் சிறந்து நற்சொல் உடையவராகவும், எக்காலத்தும் செயலாற்றும் திறனறிந்தும், எதையும் ஆராய்ந்து ஆலோசனைக் கூறவல்ல அமைச்சரே, அரசர்க்கு சிறந்த துணையாவார். 

636
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் 
யாவுள முன்நிற் பவை?

இயற்கையான நுட்ப அறிவோடு, நூல் அறிவும் உடையவர் முன்பாக, அதிநுட்பம் கொண்ட சூழ்ச்சிகள் என, எதிர்கொண்டு நிற்பவை எவையும் உள்ளனவோ?

637
செயற்கை அறிந்தக் கடைத்தும், உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

நூல்பல கற்றறிந்து, அதன்கண் அறிவில் சிறந்து, செயலாற்றும் வல்லமை இருப்பினும், உலகத்து இயற்கை அறிவோடு மக்களின் இயல்பறிந்து, அவற்றோடு பொருந்தும் விதமாகவும் செயலாற்றிடல் வேண்டும்.

638
அறிகொன்று அறியான் எனினும் உறுதி 
உழைஇருந்தான் கூறல் கடன்.

சொல்லப்படும் அறிவுரைகளை செவிமடுத்துக் கேட்கும் அறிவின்றியும், தன்னறிவும் இல்லாமல் செயல்படும் அரசனுக்கு, உடனிருக்கும் அமைச்சர்கள் துனிவோடு நல்ல அறிவுரைகளை எடுத்துக் கூறுதல் கடமை ஆகும்.

639
பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.

தவறான வழிமுறைகளில் சிந்தித்து, அரசர்க்கு ஆலோசனை கூறும் அமைச்சரை விடவும், எழுபது கோடி பகைவர்களின் பக்கத்தில் இருப்பதானது மேலானதாகும்.

640
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.


அரசால் செவ்வனே செயலாற்றும் விதமாக முறையாகத் தீட்டப்படும் திட்டங்களும் கூட, செயல்திறமற்றவர்களால் செயல்படுத்தப்படும் போது, குறைபட்டு முடங்கித் தோல்வியுறும்.

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *