Powered By Blogger

39.இறைமாட்சி

(நாடாளும் அரசருக்கான நெறிமுறைகள்)

அதிகாரம்#39 | பொருட்பால் | அரசியல் | குறள்கள்#381-390

381
படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் 
உடையான் அரசருள் ஏறு.

படை, குடிமக்கள், உணவு வளம், அமைச்சரவை, அண்டைய நட்பு நாடுகள், பாதுகாப்பு அரண் ஆகிய ஆறு அங்கங்களையும் சிறந்தனவாகக் கொண்டவனே அரசர்களுள் சிங்கம் போன்றவனாவான். 

382
அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு.

அஞ்சாத நெஞ்சம், இரக்க குணம், அறிவாற்றல், உயர்ந்த எண்ணம் மிகுத்த ஊக்கம் இவை நான்கும் அரசருக்கான இயல்பான பண்புகளாகும்.

383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு.

காலம் தாழ்த்தாத செயல்திறம், அறிவுடைமை, மனத்திடம் இவை மூன்றும் நாடாளும் அரசர்க்குத் தவறாமல் நிலைத்திருக்க வேண்டிய பண்புகளாகும்.

384
அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு.

அறநெறியினின்று விலகாது, நாட்டில் அறமற்ற கொடுமைகள் இல்லாது நீக்கி, குன்றாத வீரத்தோடு நின்று ஆட்சி செலுத்தும்  மானம் மிக்கவனே சிறந்த அரசனாவான்.

385
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.

முறையான நிதி ஆதாரங்களைக் கணித்து பொருள் சேர்க்கும் திட்டங்களை இயற்றுதலும், அதன்படி பொருளைச் சேர்த்தலும், சேர்த்த பொருளை ஊழலுக்கு இறையாகாமல் பேணிக் காத்தலும், காத்த பொருளை மக்கள் நலனுக்காக நெறிமுறைகளோடு செலவிடுதலுமே திறம் மிக்க அரசினர்க்கு இலக்கணமாகும்.

386
காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

எளியோர்க்கும் எளியவராகவும், கடுஞ்சொல் கூறாத இனியவாய் பேசும் பண்புடைய அரசரால் ஆளப்பெறும் நாட்டை, இவ்வுலகம் மிகவும் புகழ்ந்து கொண்டாடும்.

387
இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான் கண்டனைத்துஇவ் வுலகு.

இனிய சொல்லோடு, நலிந்தோர்க்கு வேண்டியன உதவிடும் இரக்கச் சிந்தையும் கொண்ட அரசர்க்கு, அவர் எண்ணியவாறே புகழோடு எல்லாமும்  இவ்வுலகம் தரும்.

388
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறையென்று வைக்கப் படும்.

நீதிநெறி தவறாமல் நல்வழி காட்டி, நாட்டை வழி நடத்தி, குடிமக்களைக் காக்கும் அரசன், மக்களைக் காக்கவல்ல இறை நிலையில் வைத்து போற்றப்படுவான். 

389
செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

தம்மிடம், குறைகூறுவோரின் கடும் சொல்லையும், பொறுத்துக் கொள்ளும், பண்புடைய அரசனது மாண்புமிகும் நல்லாட்சிக் குடையின்கீழ், இவ்வுலகமே தங்கும். 

390
கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும் 
உடையான்ஆம் வேந்தர்க்கு ஒளி.

நலிந்தார்க்கு வேண்டுவன வழங்கும் கொடைப் பண்பு, அன்புநெறித் தவழும் மனம், நடுவுநிலைப் பிறழாத நீதி காக்கும் மாண்பு, குடிமக்களைப் பேணிக் காக்கும் தன்மை இந் நான்கும் அரசர்க்கெல்லாம் ஒளியாக வழிகாட்டும் விளக்காகும்.

◀|அதிகாரம் 38. ஊழ்|
| அதிகாரம் 40.கல்வி|►

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *