Powered By Blogger

40.கல்வி

(கற்றல் எனும் சிறந்த செல்வம்)

அதிகாரம்#40 | பொருட்பால் | அரசியல் | குறள்கள்#391-400

391
கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக.

கற்க வேண்டிய நல்ல அறிவுமிகும் நூல்களை திறம்படக் கற்றுத் தேர்ந்து, பின்னர், கற்றவாறே, நெறிதவறாது நல்வழியில் வாழ்ந்திடல் வேண்டும்.

392
எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.

எண் என்பதும், எழுத்து என்பதும் ஆகிய இரண்டையும் அறிவுடைய மாந்தர், உலகில் வாழும் உயிர்க்கெல்லாம் இரு கண்களெனப் போற்றிடுவர்.

393
கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்உடையர் கல்லா தவர்.

கண்கள் அற்றவரே ஆயினும், கற்றவர்கள் கண்களையுடையவர் ஆவர்; கல்லாதவர் இரு கண்களை உடையவராயினும், அவர் முகத்தே, இரு புண்களை உடையவர் என்றே கருதப்படுவர்.

394
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் 
அனைத்தே புலவர் தொழில்.

மனதில் உவகைப் பொங்கிட கூடிப் பழகுதலும், பின்னர் பிரியும் தருணத்தே, மனம் வருந்திச் சோர்ந்திடலும், கல்வி அறிவிற் சிறந்த மாந்தர்தம் செயலாகும்.

395
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்; 
கடையரே கல்லா தவர்.

செல்வந்தர் முன்பாக, வறியவர்கள் பணிந்து நிற்பதைப் போல், அறிவுடையோரிடம் ஏக்கம் கொண்டவராய், தாழ்ந்து நின்று கற்பவரே கல்வியில் உயர்ந்தவர் ஆவார்; அவ்வாறு கல்லாதவர், தாழ்ந்தவராவார். 

396
தொட்டனைத்து  ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.

மணற் கேணியில், தோண்டும் அளவிற்கேற்ப, நீரூற்றுக் கிடைப்பதைப் போல, மனிதர்க்கு அவர்கள் கற்கும் கல்வியின் அளவிற்கேற்ப, வளரும் அறிவு.

397
யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

கற்றோருக்கு, தாம் எந்த ஊர், எந்த நாடானாலும், எல்லா ஊரும் எல்லா நாடும் தமக்குச் சொந்தமாகும். ஆனால், ஒருவன் சாகும் வரையிலும், கல்லாமலே வாழ்நாளை வீணேக் கழிப்பது ஏன்?

398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

ஒருவர், ஒரு பிறப்பில் கற்ற கல்வியானது, அவரது ஏழு பிறப்பிற்கும் நன்மையையும் பாதுகாப்பையும் தந்து உதவிடத்தக்க வல்லமை உடையதாகும். 

399
தாம் இன்புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

தாம் இன்புறக் காரணமாகத் திகழ்ந்த கல்வியால், உலகமே இன்புறுவதைக் காணுகின்ற கற்றறிந்த மேன்மக்கள், அக் கல்வியையே மென்மேலும் விரும்புவர்.

400
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை.

கல்வி மட்டுமே ஒருவர்க்கு அழிவற்ற செல்வமாகும்; மற்றவை எதுவும், அத்தகைய சிறந்த செல்வம் ஆகாது.

◀|அதிகாரம் 39.இறைமாட்சி |
| அதிகாரம் 41.கல்லாமை|►

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *