Powered By Blogger

61.மடிஇன்மை

(சோம்பல் இல்லாது வாழ்தல்)

அதிகாரம்: 61. மடி இன்மைபால் வகை: 2. பொருள்

இயல்: 5. அரசியல்

601
குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்.

ஒருவர்க்கு தான் பிறந்த குடியானது, எத்தகு பெருமை மிகுத்து ஒளிமிக்கதாய் சிறந்ததாயினும், அங்கே மடி எனும் சோம்பல் குடிகொண்டுவிடின், ஒளி குன்றியதாய் அழிந்து போகும்.

602
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

தாம் பிறந்த குடும்பத்தை மென்மேலும் சிறந்ததாய் செய்திட வேண்டுமாயின், சோம்பலைச் சோம்பலாகக் கருதி முயற்சிகள் மேள்கொள்ளுதல் வேண்டும். 

603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த 
குடிமடியும் தன்னினும் முந்து.

மனிதர்க்கு ஒரு போதும் ஆகாத, சோம்பேறித் தனத்தை, தன்னுள் தாங்கிப் பிடித்துக் கொண்டு வாழும் அறிவற்றவன், தாம் அழிவதற்கு முன்பாகவே, தாம் பிறந்த குடியும், அழிவதைக் காண்பான். 

604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.

சோம்பல் கொண்டு வாழ்பவரிடத்தே, சிறந்த முயற்சிகளும் இல்லாது போவதுடன் குடும்பமும் வீழ்ச்சி அடைந்து ஆங்கே, குற்றங்களும் பெருகும். 

605
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய உறக்கம் இவை நான்கும் அழிவைத் தேடித் தாமே விரும்பி ஏறிக் கொள்ளும் மரக்கலம் போன்றதாகும். 

606
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

நிலம் முழுவதையும் ஆண்ட பெருமக்களுடைய செல்வம் யாவும் தம்மிடம் வந்து சேரப் பெற்றவராயினும், மடி எனும் சோம்பலை உடையவராயின், அதனால் சிறந்த பயனை அடைவது  இயலாததாகும்.

607
இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

சோம்பலில் வீழ்ந்து, சிறந்த முயற்சி இல்லாது வாழ்பவர்கள், பிறரால், இடித்துக் கூறப்பட்டும், பின்னர் அவர்களின், இகழ்ச்சியானப் பேச்சைக் கேட்கும் நிலைக்கும், ஆளாவார்கள்.

608
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.

நற்குடியில் பிறந்தவரே ஆயினும் மடிமை எனும் சோம்பல் தனத்திற்கு அடிமையாகினால், அதுவே அவரை இழிநிலைக்குத் தள்ளி, அவர்தம் பகைவரிடத்தே அடிமையாக்கி விடும். 

609
குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடிஆண்மை மாற்றக் கெடும்.

ஒருவர் சோம்பலில் இருந்து விடுபட்டு, அதை அறவே ஒழித்து விட்டால் அதுவரை சோம்பலால் அவர்தம் குடியை பீடித்திருந்த சிறுமையும் குற்றங்களும் நீங்கும். 

610
மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.


தன் அடியால் உலகை அளந்த கடவுளானவர் தான் கடந்து அடைந்த பரப்பு முழுவதையும், சோம்பல் இல்லாதவர் ஒருசேர அடைவார். 

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *