Powered By Blogger

3. நீத்தார் பெருமை

(துறவு கொண்டோரின் சிறப்பு)

அதிகாரம்.3 | அறத்துப்பால் | பாயிரம் | குறள்கள்#21-30


21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

நல்லொழுக்க நெறிகளைப் பின்பற்றி ஆசைகளைத் துறந்தவர்களின் பெருமையை சிறந்தது எனப் போற்றிக் கூறுதல் நூல்களின் துணிவாகும். 


22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து 

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 


துறவிகளின் பெருமையை அளவிட்டு எடுத்துக் கூறல், இவ்வுலகில் இறந்தோரை எண்ணிக் கணக்கிடுதல் போன்றது.


23

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.


நன்மை தீமைகளை ஆராய்ந்து அறிந்த பின், இப்பிறப்பில் துறவு மேற்கொள்வோரின் பெருமையே உலகில் உயர்ந்ததாகப் போற்றப்படும்.


24

உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து.


தன் அறிவின் பலத்தால், யானைகளைப் போன்ற ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவன், எல்லாவற்றிலும் மேலான வீடு எனும், பேரின்ப நிலத்திற்கு சிறந்த விதை போன்றவன் ஆவான்.

25

ஐந்து அவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்

இந்திரனே சாலும் கரி.


ஐம்புலன்களின் ஆசைகளை அடக்கியவனின் ஆற்றலுக்கு வானுலகத் தலைவனாகிய இந்திரனே தக்க சாட்சியாவான்.


26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.


செய்வதற்கு அரிதான செயல்களை செய்பவரே பெரியோர்; அவ்வாறு செய்ய இயலாதவர் சிறியோர் ஆவார்.


27

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின் 

வகைதெரிவான் கட்டே உலகு.


சுவை, பார்வை, உணர்ச்சி, ஓசை, மணம் ஆகிய ஐந்தின் வகையான ஐம்புலன்களையும் அறிந்து, அடக்கியாளும் வல்லவனிடத்தில் இவ்வுலகம் வசப்பட்டதாம்.


28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து 

மறைமொழி காட்டி விடும்.


பயன்மிக்கதான நிறைச் சொற்களை கூறும் துறவிகளின் பெருமையை அவர்களின் அச்சொற்களே உலகுக்குக் காட்டிவிடும்.


29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 

கணமேயும் காத்தல் அரிது.


நற்குணம் என்னும் மலை மேல் உயர்ந்து நிற்கும் துறவிகளுக்கு கணநேர கோபம் கொள்வது என்பதும் அரிதாகும்.


30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.


எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அன்பு செலுத்தும் அறம் கொண்டு வாழ்வோரே அந்தணர் ஆவார்.


முற்றும்


அடுத்த அதிகாரம் - 4 அறன் வலியுறுத்தல்

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *