Powered By Blogger

4. அறன் வலியுறுத்தல்

(அறத்தின் சிறப்பை வலியுறுத்துதல்)

#31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு?

அறம் என்பது, மக்களுக்கு சிறப்பையும் செல்வத்தையும் தரக்கூடியது; ஆதலால், அவ்வறத்தை விடவும், நன்மை பயப்பது வேறு யாது? 

32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.

அறம் செய்வதைக் காட்டிலும், சிறந்த நன்மையைத் தருவது, ஏதும் இல்லை; அத்தகைய அறத்தினை செய்யாமலிருத்தலை விடவும், வேறு பெரிய கேடும், எதுவுமில்லை. 

33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
சொல்லும்வாய் எல்லாம் செயல்.

இயன்ற வரையில், தக்க இடங்களில் எல்லாம், அறம் சார்ந்த செயல்களை, இடைவிடாமல் செய்தல் வேண்டும்.

34
மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

ஒருவன் தம் மனதால், குற்றம் அற்றவனாக இருத்தல் வேண்டும்; அதுவே, அறம் ஆகும். அதுவல்லாது மற்ற யாவும் வீண் ஆரவாரமே.

35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கும், அறத்திற்குப் புறம்பானவையாகும்; எனவே, அவற்றை விலக்குதலே, அறமாகும். 

36
அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றும் கால் பொன்றாத் துணை.

பின்னாளில் பார்த்துக் கொள்வோம் என்றில்லாமல், இப்போதே அறம் செய்தல் வேண்டும்; அங்ஙனம் செய்யும் அறமே பின்னாளில் தம் இறுதிக் காலத்தே துணை நிற்கும். 

37
அறத்தாறு இதுஎன வேண்டா; சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

அறத்தினால் விளையும் பயன் இதுவென்று யார்க்கும் சொல்ல வேண்டியதில்லை; பல்லக்கை சுமப்பவரையும், அதன் மேல் அமர்ந்து செல்பவரையும் பார்க்குங்கால் உணரப்படும். 

38
வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.

ஒருவன், நாள் தவறாது செய்யும் அறம், அவன் மீண்டும் பிறத்தலுக்கான பிறவி வழியை அடைக்கும் கல்லாக அமையும். 

39
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த; புகழும் இல.

அறம் சார்ந்த வாழ்வின் வழியே வருவதே புகழுடன் கூடிய இன்பமாகும்; அறமின்றி வருவன எல்லாம் துன்பமானதும், புகழ் அற்றதுமாகும். 

40
செயற்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி.

ஒருவன், வாழ்நாளில் செய்யத் தக்கது அறமே;  செய்யாது தவிர்க்க வேண்டியது, தன்பால் பழி சேர்க்கும் தீய செயல்களே.

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *