அதிகாரம்#37 | அறம் | துறவறவியல் | குறள்கள்#351-370
361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்புஈனும் வித்து.
எல்லா உயிர்களிடத்தும், எக்காலத்தும் தவறாமல் வந்து மறையும் ஆசையே துன்பத்திற்கு வித்தாகும்.
362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது
வேண்டாமை வேண்ட வரும்.
ஒருவர்க்கு பிறவியானது துன்பம் மிக்கது என்பதனால், தாம் விரும்பும்போது பிறவா நிலையை அடைந்திட வேண்டின், அதற்கென, அவர் ஆசைகளற்ற நிலையை விரும்புங்கால் வாய்க்கப்பெறும்.
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.
துன்பந்தரும் ஆசைகளை வேண்டா என ஒதுக்குதலைப் போன்ற சிறந்த செல்வம் இங்கே ஏதுமில்லை; வேறெங்கிலும் கூட, அதற்கு ஈடான செல்வம் என, ஒன்று இல்லை.
364
தூஉய்மை என்பது அவாவின்மை; மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
தூய்மை எனப்படுவது ஆசைகளற்ற நிலையாகும்; அத் தூய்மையானது வாய்மை நெறியாம் மெய்ப் பொருளை விரும்புவதால் வாய்க்கப் பெறுவதாகும்.
365
அற்றவர் என்பார் அவாஅற்றார்; மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
ஆசைகளை எல்லாம் விட்டொழித்தவரே துன்பம் அற்றவர் ஆவார்; மற்றவர்கள், முற்றாக ஆசைகளைக் கைவிடாதவராகையால், அவர்கள் துன்பம் அற்றவர் ஆகமாட்டார்.
366
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா.
ஆசைகளுக்கு அடிமையாகாமல் அஞ்சி வாழ்தல் அறம் ஆகும்; ஏனெனில், அவரை ஒருவரை வஞ்சித்துத் துன்பம் தரவல்லது ஆசையே ஆகும்.
367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.
ஒருவர், ஆசையை முற்றிலுமாக ஒழித்து வாழும் அறத்தை பின்பற்றுவாராயின், அவர் விரும்பும் வண்ணம் சிறந்த வாழ்விற்கான நற்செயல்கள் வாய்க்கப்பெறும்.
368
அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்; அஃதுஉண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
ஆசைகளைத் துறந்தவர்களுக்குத் துன்பம் இல்லை; ஆசை உண்டானால், அதனால் மேலும் மேலும், துன்பங்கள் ஓயாது வந்து கொண்டேயிருக்கும்.
369
இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
துன்பத்துள் எல்லாம் பெருந்துன்பமாகிய ஆசையை ஒழித்திடின், இடையறாது, இன்பம் நிறைந்த வாழ்வு நிலை உண்டாகப்பெறும்.
370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
இயல்பிலேயே தோன்றும் நிறைவடையா ஆசைகளை விட்டொழிப்பவருக்கு, அந்தக் கணம் தொட்டே, இயற்கையான இன்ப வாழ்வு அமைந்திடக் காண்பர்.
◀|அதிகாரம் 36.மெய்யுணர்தல் |
| அதிகாரம் 38.ஊழ்|►

