(அரசன் தனது ஒற்றரை நன்கு ஆளுகை செய்வதன் அவசியம்)
அதிகாரம்: 59. ஒற்றாடல் பால் வகை: 2. பொருள்இயல்: 5. அரசியல்
581
ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
ஒற்றரும், தெளிந்த நெறியுடைய புகழ்மிக்க நீதி நூலும், அரசாள்பவர்க்கு இரு கண்களாகும்.
582
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.
583
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்தது இல்.
ஒற்றர் மூலம் நாட்டு நிலவரங்களை அறிந்து கொண்டு, அதன்பொருட்டு நிகழ வாய்ப்புள்ள விளைவுகளை ஆராய்ந்து தெளிந்திடாத அரசு, மென்மேலும் நிலைத்து வெற்றி பெறுதற்கு வேறு வழி இல்லை.
584
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
அரசு அலுவலர், தனது சுற்றத்தார், எதிர்க் கருத்து கொண்டவர் என, அனைத்து தரப்பினரின் சொல், செயல் ஆகியனவற்றை ஆராய்ந்துணரும் வகையில், கடமையாற்றுவதே ஒற்றரின் பணியாகும்.
585
கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
ஐயம் கொள்ளவியலாத் தோற்றத்தோடு, ஐயம் கொள்வாரின், பார்வைக்கும் அஞ்சாது, சாம தான பேத தண்டம், என நால்வகை அச்சுறுத்தலுக்கும் பணியாது, மனத்துள் கொண்ட எதையும், வெளிச்சொல்ல மாட்டாத, வல்லமை உடையவரே ஒற்றர் ஆவார்.
586
துறந்தார் படிவத்தராகி இறந்துஆராய்ந்து
என்செயினும் சோர்வுஇலது ஒற்று.
துறந்தவர் போல் வேடந்தரித்து, உட்புகவியலா இடமெல்லாம் சென்று, வேண்டுவன அறிந்து, தம் மீது ஐயம் கொண்டோர், தமக்கு எத்தகு துன்பம் விளைவித்தாலும், சோர்ந்திடாது, தம்மை வெளிப்படுத்தாதவனே ஒற்றன்.
587
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
மறைவாய் நடந்த செயல்களை, அவற்றை செய்தவர் வாயாலேயே சொல்லக் கேட்டறியும் வல்லமையோடு, கேட்டவற்றுள்ளும், எவ்வித ஐயமும் இல்லாதவராய் இருப்பதே ஒற்றரின் உளவுத் திறன் ஆகும்.
588
ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
ஓர் ஒற்றன், அறிந்து வந்து அளித்த செய்தியை, அதே இடத்தினிற், மற்றோர் ஒற்றனை அனுப்பி, மீண்டும் உளவறியச் செய்து, அதனோடு ஒத்திசைவு செய்து, உண்மைத் தன்மை குறித்து உறுதி செய்துகொளல் வேண்டும்.
589
ஒற்றுஒற்று உணராமை ஆள்க; உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும்.
அரசுக்காக இயங்கும் ஒரு ஒற்றரை, மற்றோர் ஒற்றர் அறிந்து கொண்டு விடாதபடி ஆளுமை செய்க; மூன்று ஒற்றர்களின் செய்திகள், ஒன்றுபோல் ஒத்திருந்தாலும், அவற்றின் உண்மையைத் தெளிந்த பின், ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
590
சிறப்புஅறிய ஒற்றன்கண் செய்யற்க; செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.
ஒற்றருக்கு செய்விக்கப் பெறும் சிறப்பை, பிறர் அறிய செய்தல் கூடா; அவ்வாறு செய்தால், ஒற்றரையும், அவர் செய்த மறைபொருளையும், ஊரறியச் செய்வதாகி விடும்.

