(மனம், சொல், செயல்களால் தீமையல்லாது அடக்கம் கொண்டொழுகுதல்)
121
அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
அடக்கம், எனும் உயர்ந்த அறநெறியைப் பின்பற்றுபவர், சிறந்த புகழ்நிலையை அடைவர்; அடங்காமை, அவர்தம் வாழ்வில் இருள் போன்ற துன்பமே சூழும்.
122
காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
அடக்கம் எனும் சிறந்தப் பண்பை செல்வமெனக் காத்தல் வேண்டும்; ஏனெனில், அதைவிட ஆக்கம் தரும் சிறந்த செல்வம், இவ்வுலகில் இல்லை.
123
செறிவுஅறிந்து சீர்மைப் பயக்கும் அறிவுஅறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
அடக்கம் எனும் பண்பே அறிவுடைமை, என்பதறிந்து அதன்படி வாழ்வோர் சான்றோரால் மதிக்கப்பெற்று மேன்மை பெறுவர்.
124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
அடக்கம் எனும் அறம் சார்ந்த வாழ்க்கை நெறி தவறாதவரின் பெருமை மலையினும் மிக உயர்ந்ததாகும்.
125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
அடக்கம் எனும் அறம், எல்லோருக்கும் நன்மை தருவதாகும்; அதிலும், செல்வந்தருள் வாய்க்கப்பெறும் அடக்கம் அவருக்கு மற்றுமொரு சீரிய செல்வமாகும்.
126
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
ஆபத்தில், ஆமை தம் ஓட்டுக்குள் புகுந்துக் காத்துக் கொள்ளுதல் போல, ஒருவர் ஐம்பொறிகளையும் அடக்குவாரெனின், அதுவே அவரை எழுப் பிறப்பிலும் தீமைகளிலிருந்தும் காக்கும்.
127
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
ஒருவர் எதைக் காத்திடாவிடினும், முதலில் தம் நாவை அடக்கிக் காத்துக் கொள்ளுதல் வேண்டும்; இல்லையேல், சொற் குற்றத்தில் சிக்குண்டு தாமே துன்பத்திற்கு ஆளாவர்.
128
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
ஒருவர் பேசிய ஒரேயொரு தீயச் சொல்லேயானாலும், அதனால் விளைந்த துன்பத்தினால், அவர் செய்த மற்ற நல்லறங்களாலும் நன்மை விளையாது போகும்.
129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
தீயினால் சுட்ட புண்ணால் உண்டான வடு, உள்ளே ஆறிவிடும்; ஆனால், நாவினால் கூறிய கடுஞ்சொல்லால் உண்டான மனக்காயம், என்றும் ஆறாது.
130
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
சினத்தை அடக்கி, சிறந்த கல்வியறிவில் தேர்ந்து, அடக்கம் எனும் நற்பண்புடைவரின் வழியில், அறமே எதிர்பார்த்து காத்திருக்கும்.

