Powered By Blogger

17.அழுக்காறாமை

(பிறன்பால் பொறாமை கொள்ளாமை)

அதிகாரம்#17 | அறம் 
இல்லறவியல் குறள்கள்#161-170

161
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

ஒருவர் உள்ளத்தால் பிறன் மீது பொறாமை கொள்ளாத இயல்பினை, தம் வாழ்வின் ஒழுக்க நெறியாகக் கொள்ளுதல் வேண்டும்.

162
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

எவரிடத்தும் பொறாமை கொள்ளாத நற்குணம் கொண்டவர்க்கு, அதற்கு ஒப்பான வேறு சிறப்பு எதுவுமில்லை.

163
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

அறம், செல்வம் இரண்டையும் போற்றத் தகாதவரே, பிறன் வளர்ச்சி கண்டு மனம் தாளாமல், அவர் மீது பொறாமை கொள்வர்.

164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

பொறாமை எனும் தீய எண்ணத்தால் துன்பமே நேரும் என்பதையறிந்தவர், அப் பொறாமை எண்ணத்திலான தீங்கு எதையும் செய்ய மாட்டார்.

165
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடுஈன் பது.

பொறாமை குணம் கொண்டவரை வீழ்த்திட, பகைவர் எவரும் தேவையில்லை; அவரது பொறாமை குணமே அவரை அழித்து விடும்.

166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பிறர்க்கு உதவியெனக் கொடுப்பதைக் கண்டு பொறாமை கொள்பவரின் குடும்பத்தார் உணவு, உடையின்றிக் கெடுவர்.

167
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

செல்வத்தின் திருமகள் இலக்குமியானவள், பொறாமை குணம் உடைவனிடத்தே வெறுப்புற்று விலகி, அவனிடத்தே தம் தமக்கை, மூதேவியான வறுமையை குடிகொள்ளச் செய்து விடுவாள்.

168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

பொறாமை குணம் என்பது ஒரு பாவி; அதைக் கொண்டவன் தன் செல்வத்தை இழப்பதோடு, அவனை தீய வழியிலும் சென்று சேர்ந்திடச் செய்துவிடும். 

169
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும்.

பொறாமை குணம் கொண்டவனின் வளமை மிக்க வாழ்வும், பொறாமையற்றவனின் வறிய வாழ்க்கையும் ஆராயத் தக்கவையாகும்.

170
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

பொறாமை எனும் இழிகுணம் கொண்டவருள், வாழ்வில் மேன்மையுற்றாரும் இல்லை; பொறாமை இல்லாத நற்பண்பினருள், தாழ்வுற்றாரும் இல்லை.

அடுத்த அதிகாரம் 18.வெஃகாமை

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *