அதிகாரம் #69 தூது
(தூது செல்வோர்க்கான பண்புகள்)
பொருட்பால் | அங்கவியல் | குறள்# 681-690
681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
அன்புமிகுந்த குணம், நற்குடிப் பிறப்பு, அரசினரின் போற்றுதற்குரிய நற்பண்புடைமை, ஆகியத் தன்மைகளைக் கொண்டிருத்தலே தூது செல்வோர்க்கான இன்றியமையா இலக்கணங்களாகும்.
682
அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
அன்புடைமை, அறிவுடைமை, எதையும் ஆராய்ந்து எடுத்துரைக்கும் சொல்லாற்றல் ஆகிய மூன்றும் தூது செல்பவருக்கான இன்றியமையாப் பண்புகளாகும்.
683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினைஉரைப்பான் பண்பு.
அறிவுநூல் பலவும் கற்றவருள் எல்லாம், வல்லமை கொண்டு திகழுதல் என்பதாவது தமது நாட்டின் நலன், மற்றும் வெற்றியை நாடி, ஆயுதபலம் பொருந்திய எதிரி நாட்டிற்குள் தூதுரைக்கச் செல்பவரது பண்பாகும்.
684
அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
தெளிந்த அறிவு, பொலிவு கொண்ட தோற்றம், தேர்ந்த கல்வி இந்த மூன்று தன்மைகளையும் நிரம்பப் பெற்றவரே வேற்று நாட்டினரிடம் தூதுரைக்கும் பணிக்குச் செல்லத் தகுதி படைத்தவர் ஆவார்.
685
தொகச்சொல்லித் தூவாத நீக்கி, நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.
வேற்றரசரிடம் சினத்தைத் தூண்டும் விரும்பத்தகாதச் செய்திகளைத் தவிர்த்து, சொல்ல வேண்டிய செய்திகளை இனிய சொற்களால் நயம் மிக்கவாறு தொகுத்துரைப்பதன் மூலம், தமது சொந்த நாட்டிற்கு நன்மைப் பயக்கச் செய்வது சிறந்த தூதுவரின் பண்பாகும்.
686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.
கற்றுத் தேர்ந்த அறிவுடையவராக எதிரிகளின் பகைமை கொண்ட பார்வைக்கு அஞ்சாதவராக காலத்திற்கேற்ப, செய்யத் தக்க வழிகளைக் கண்டறிந்து செயல்களைச் செய்து முடிக்க வல்லவரே சிறந்த தூதுவராவார்.
687
கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
வேற்று நாட்டில் தமது சொந்த நாட்டிற்காக தாம் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து நன்கறிந்து, அவற்றைச் செய்வதற்கு ஏற்ற காலம், இடம் குறித்து முன்னமே சிந்தித்து சொல்பவரே தலைசிறந்த தூதுவர் ஆவார்.
688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
தூய ஒழுக்கம், வேற்று நாட்டிற்குள் செயலாற்றுதற்கேற்ற நல்ல துணை, எதற்கும் அஞ்சாத உள்ளம் ஆகிய மூன்றினொடும் மெய்த்தன்மையையும் பெற்றிருத்தல் தூதுவரின் சிறந்த பண்பாகும்.
689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்.
தன் நாட்டிற்காக வேற்றரசரிடம் தூதுரைக்கச் செல்லும் தூதுவர், அங்கே தாம் சந்திக்க நேரும் ஆபத்தினைக் கண்டு அஞ்சி, வாய் தவறிக்கூட தவறான அல்லது இழிவானச் சொற்களைச் சொல்லிவிடாத ஆற்றல் உடையவராக இருத்தல் வேண்டும்.
690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.
வேற்று நாட்டிற்கு தூதுரைக்கச் செல்லுமிடத்தே, தமக்கு அழிவே நேரும் நிலை வந்தாலும், அதற்காக அஞ்சாமல் தமது அரசின் நலன்கருதி அதற்கென உறுதியோடு செயலாற்றுபவரே அரசின் நம்பிக்கைக்குரிய தூதுவர் ஆவார்.

