Powered By Blogger

38.ஊழ்

(ஊழ்வினை எனும் விதியின் வலி)

அதிகாரம்#38 | அறத்துப்பால் | ஊழியல் | குறள்கள்#371-380

371
ஆகுஊழால் தோன்றும் அசைவின்மை; கைப்பொருள்
போகுஊழால் தோன்றும் மடி.

ஒருவர்க்குப் பொருள் சேர்வதற்கு, விதியாகிய ஊழ்வினையானது காரணமாக  அமையுமானால், அவருக்கு ஊக்கமும் முயற்சியும் உண்டாகும்; அப் பொருள் கைவிட்டுப் போவதற்கான ஊழ்வினை அமையுமானால், சோம்பல் நிலை உண்டாகும்.

372
பேதைப் படுக்கும் இழவுஊழ்; அறிவகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை.

ஒருவர் தாழ்ந்திடற்கான விதி இருப்பின், அவரை அறியாமையில் தள்ளும்; உயர்வுக்கான விதி இருப்பின் அவரது அறிவைப் பெருக்கும்.

373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.

ஒருவர் நுண்ணறிவு மிக்கதான நூல்கள் பலவும் கற்றவராயினும், அவரது ஊழ் வினையாகிய விதியின் வலிமையால், இயற்கை அறிவே மிகும்; கற்றதன் பயனால் அறிவு மிகுவதில்லை.

374
இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

ஊழின் காரணமாக, இவ்வுலகம் இருவேறு நிலைகளைக் கொண்டது என்பது இயற்கையாகும்; ஒன்று, செல்வந்தரை உருவாக்கும் விதியும், மற்றொன்று, அறிஞராக்கும் விதியுமாக, இரண்டும் வேறு வேறானது.

375
நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும் 
நல்லவாம் செல்வம் செயற்கு.

செல்வம் ஈட்டும் முயற்சியின் போது, ஊழ்வினையாகிய விதிவலிமையால், ஒருவரின் நல் வழியிலான செயல், தீமையிலும், தீய வழியிலான செயல், நன்மையிலுமாக  அமையக்கூடும்.

376
பரியினும் ஆகாவாம் பால்அல்ல; உய்த்துச்
சொரியினும் போகா தம.

விதியின் வலிமையால், நம் பொருளை வருந்திக் காத்திடினும் நிலைக்காமற் போகலாம்; உரிமையுள்ள பொருளை வேண்டாவெனத் தள்ளி விட்டு வந்தாலும், அவை நம்மை விட்டுத் தொலைந்து போகாது.

377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி 
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

தாம் சேர்த்து வைத்த கோடியளவிலான பொருளேயானாலும், அவற்றை, ஊழ்வினையான தம் விதியின் வலிமையால் அன்றி, அனுபவித்தல் அரிதாகும். 

378
துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

வறுமை வந்து, நுகர்வதற்கென பொருளேதுமற்ற நிலையில், துன்பங்களினின்று வறியோரை ஊழ் எனும் விதி வந்து தடுத்திராவிடின், அவர்கள் துறவறம் மேற்கொள்வர்.

379
நன்றுஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆம்கால்
அல்லற் படுவது எவன்?

வாழ்வில், நல்வினைகளால் நல்லவை வாய்ப்பது கண்டு மகிழ்கின்றவர், தீவினைகளின் பொருட்டு, தீமைகள் வரும்போது மட்டும் மனம் கலங்கித் துன்புறுவது ஏனோ?

380
ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்.

ஊழ்வினை எனும் விதியை விடவும் வேறு வலிமையானது ஏதுமில்லை; விதியை விலக்கிட வேண்டி, மற்றொரு வழியைத் தேடின், ஊழின் வலியாகிய விதியே அங்கே முன்வந்து நிற்கும்.

◀|அதிகாரம் 37.அவா அறுத்தல்|

 அறத்துப்பால் நிறைவுற்றது 

| பொருட்பால் | அதிகாரம் 39.இறைமாட்சி|►

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *